நீதிமன்ற உத்தரவின் பேரில் வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக மீண்டும் பதவியேற்றார் சுனிதா பாலயோகி

5 hours ago 1

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சுனிதா பாலயோகியை கடந்த 2024 ஜனவரி மாதம் பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் உத்தரவிட்டார். இதனையடுத்து துணைத் தலைவராக இருந்த ஆர்.மோகனசுந்தரம் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பதவி நீக்கம் செய்தது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் சுனிதா பாலயோகி தரப்பில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் சுனிதா பாலயோகியை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து அதன் நகலை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கரிடம் நேற்று முன்தினம் வழங்கி, பதவி ஏற்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக சுனிதா பாலயோகியை கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில், நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அ.மணிசேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது ஊராட்சி மன்றத் தலைவராக சுனிதா பாலயோகி மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இ.தினேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் நா.வெங்கடேசன், பா.யோகானந்த் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

The post நீதிமன்ற உத்தரவின் பேரில் வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக மீண்டும் பதவியேற்றார் சுனிதா பாலயோகி appeared first on Dinakaran.

Read Entire Article