நீதிமன்ற அறிவிப்பாணையை வாரண்டாக்கி தலைமை குற்றவியல் நடுவரை குற்றவாளியாக்கிய போலீஸ் எஸ்ஐ: உத்தரபிரதேச காவல்துறையில் நடந்த கூத்து

1 day ago 4

ஆக்ரா: நீதிமன்ற அறிவிப்பாணையை வாரண்டாக்கி உத்தரபிரதேச குற்றவியல் நடுவரை குற்றவாளியாக்கிய போலீஸ் எஸ்ஐயின் செயல்பாடு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் நக்மா கான், கடந்த சில நாட்களுக்கு முன் திருட்டு வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு முறையாக ஆஜராகாத தலைமறைவு குற்றவாளி ராஜ்குமார் என்பவருக்கு அறிவிப்பாணை உத்தரவு பிறப்பித்தார். அதையடுத்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் பன்வரிலால், குற்றவாளியை ராஜ்குமாரைக் கண்டுபிடித்து அவரிடம் அறிவிப்பாணையை சமர்ப்பிக்கவும், நீதிமன்றத்தில் குற்றவாளியை ஆஜராக அறிவுறுத்தவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் உதவி ஆய்வாளர் பன்வாரிவால், அறிவிப்பாணை பிறப்பித்த முதன்மை குற்றவியல் நடுவரையே குற்றவாளியாக்கிவிட்டார். எப்படி என்றால், காவல் துறை பராமரிக்கும் புத்தகத்தில் குற்றவாளி பன்வாரிலாலின் பெயரை எழுதுவதற்கு பதிலாக, தலைமை குற்றவியல் நடுவர் நக்மா கானின் பெயரை எழுதிவிட்டார். ஆனால் குற்றவாளியின் பெயரை மாற்றாமல் அதே முகவரியை தேடி சென்றார். சம்பந்தப்பட்ட குடியிருப்பில் நக்மா கான் என்பவர் வசிக்கவில்லை என்று தெரிந்தவுடன், அதுதொடர்பான உத்தரவை மீண்டும் குற்றவியல் நடுவரிடம் சமர்பித்தார்.

அவர் தான் வழங்கிய அறிவிப்பாணையையும், உதவி காவல் ஆய்வாளர் கையில் வைத்திருந்த வாரண்ட்டையும் பார்த்தார். குற்றவாளியின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில், தன்னுடைய பெயர் இருப்பதை பார்த்து குற்றவியல் நடுவர் நக்மா கான் அதிர்ச்சியடைந்தார். மேலும் உதவி ஆய்வாளர் குற்றவியல் நடுவரிடம், ‘குற்றம் சாட்டப்பட்ட நக்மா கான் என்பவரைத் தேடிச் சென்றேன். அவர் வீட்டில் இல்லை; குற்றம் சாட்டப்பட்டவருக்கு (நடுவர்) எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும்’ என்று நடுவர் நக்மா கானிடமே கோரிக்கை விடுத்தார். இவ்விவகாரத்தில் அறிவிப்பாணைக்கும், ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தெரியாமல் உதவி ஆய்வாளர் நடந்து கொண்டது நீதிமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அப்போது நடுவர் நக்மா கான் கூறுகையில், ‘நீங்கள் அறிவிப்பாணை உத்தரவை சரியாகப் படிக்கவில்லை. காவல்துறை அதிகாரியாக இருக்கும் உங்களது பணித்திறன் கேள்விக்குள்ளாக்குகிறது. உங்களது கடமைகள் குறித்த புரிதல் எதுவும் உங்களிடம் இல்லை. நீதிமன்ற உத்தரவின் மீது உரிய கவனம் செலுத்தவில்லை.

இதுபோன்ற அலட்சியமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அது அனைவரின் அடிப்படை உரிமைகளையும் பாதிக்கும். நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தும் காவல்துறை அதிகாரி மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில் இந்த நடைமுறைகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய அலட்சியமான காவல்துறை அதிகாரிகள் தங்கள் தவறுகளின் விளைவுகளிலிருந்து தப்பித்து, இதுபோன்ற கண்மூடித்தனமான முறையில் உத்தரவுகளைச் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டால், அவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப யாருடைய அடிப்படை உரிமைகளையும் மிதித்து, கட்டுப்பாடின்றிச் செயல்படுவார்கள். எனவே, பணியில் அலட்சியமாக இருந்த உதவி ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது’ என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

The post நீதிமன்ற அறிவிப்பாணையை வாரண்டாக்கி தலைமை குற்றவியல் நடுவரை குற்றவாளியாக்கிய போலீஸ் எஸ்ஐ: உத்தரபிரதேச காவல்துறையில் நடந்த கூத்து appeared first on Dinakaran.

Read Entire Article