புதுடெல்லி: ரூ.13,850 கோடி வங்கி கடன் மோசடியில் தொடர்புடைய குஜராத் வைர வியாபாரி மெகுல் சோக்சியை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய அதிகாரிகள் குழு பெல்ஜியம் செல்கிறது.
குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மாமனார் மெகுல் சோக்சி மற்றும் குடும்பத்தினர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,850 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக கடந்த 2018ல் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேறி தப்பி ஓடினர்.
தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிரவ் மோடி, இந்தியாவின் சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 2019ல் லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கில் 2வது குற்றவாளியான 65 வயதாகும் மெகுல் சோக்சி 2018ல் இந்தியாவிலிருந்து வெளியேறி ஆண்டிகுவாவில் தஞ்சமடைந்தார்.
அவரையும் நாடு கடத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவ சிகிச்சைக்காக சோக்சி சுவிட்சர்லாந்து செல்வதற்காக தனது மனைவி மூலம் தற்காலிக பெல்ஜியம் குடியுரிமை பெற்று அங்கு தங்கியிருப்பதாக சமீபத்தில் தகவல் கிடைத்தது. இதன் பேரில் மும்பை நீதிமன்றம் மூலம் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் உள்ளிட்ட ஆவணங்களை காட்டி சோக்சியை கைது செய்ய பெல்ஜியம் அதிகாரிகளிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்தநிலையில், மெகுல் சோக்சியை பெல்ஜியம் போலீசார் கடந்த 12ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இத்தகவலை பெல்ஜியம் வெளியுறவு அமைச்சகம் நேற்று உறுதி செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, பெல்ஜியத்தில் சட்ட நடவடிக்கை மூலம் மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்து வர இந்திய அதிகாரிகள் குழு விரைவில் பெல்ஜியம் செல்ல உள்ளது.
* புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்
மெகுல் சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறுகையில், ‘‘சோக்சி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடர உள்ளோம். மேல்முறையீடு வழக்கு விசாரணையின் போது சோக்சியை காவலில் வைக்கக் கூடாது என்றும், அவர் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், நாடு கடத்தும் நடவடிக்கையை எதிர்க்கவும் அனுமதிக்க வேணடும் என வலியுறுத்தப்படும்.
சோக்சி தப்பித்து செல்லக் கூடியவர் அல்ல. அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார். புற்றுநோய் சிகிச்சையில் உள்ளார். இந்த மருத்துவ காரணங்கள் நீதிமன்றத்தில் கூறப்படும். மேலும், இது ஒரு அரசியல் வழக்கு, இந்திய சிறைகளில் மனித உரிமைகள் தொடர்பான கவலைகள் எங்களின் சட்டப்பூர்வ வாதமாக இருக்கும்’’ என்றார்.
* இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி
ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அளித்த பேட்டியில், ‘‘இந்த விவகாரம் இந்தியாவுக்கு பெருமை அளிக்கக் கூடியது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஒன்றிய அரசின் வெற்றிகரமான சர்வதேச உறவுகளால் மட்டுமே இந்த கைது நடவடிக்கை சாத்தியமாகி இருக்கிறது. இது இந்தியாவுக்கு, மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி’’ என்றார்.
The post வங்கியில் ரூ.13,850 கோடி கடன் வாங்கிவிட்டு தப்பிய மெகுல் சோக்சி குஜராத் வைர வியாபாரி பெல்ஜியத்தில் கைது: இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை appeared first on Dinakaran.