குஜராத் கடல் பகுதியில் ரூ.1,800 கோடி போதைப்பொருள் மீட்பு: மூட்டை மூட்டையாக கடலில் வீசி தப்பிய கடத்தல்காரர்கள்

1 day ago 5

அகமதாபாத்: குஜராத் கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. போதைப் பொருட்களை மூட்டை மூட்டையாக கடலில் வீசிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பினர். குஜராத் மாநிலத்தில் அரபிக்கடலில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டுப் பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தீவிரவாத தடுப்பு பிரிவு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவினரும், இந்திய கடலோர காவல் படையினரும் கடந்த 12 மற்றும் 13ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சர்வதேச கடல் எல்லைக் கோட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த படகில் இருந்தவர்கள், கடலோர காவல் படை கப்பலைப் பார்த்ததும், போதைப் பொருட்கள் அடங்கிய டிரம்களை கடலில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இரவு முழுவதும் கடலோரக் காவல் படையினர் கடலில் தேடுதல் வேட்டை நடத்தியதில், 300 கிலோ போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இவை மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதன் மதிப்பு ரூ.1,800 கோடி என கடலோர காவல் படை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தீவிரவாத தடுப்பு பிரிவு படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக குஜராத் கடல் பகுதி வழியாக போதைப் பொருள் கடத்தல்கள் அதிகரித்து வருகின்றன. குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவும், கடலோர காவல் படையும் இணைந்து 13வது முறையாக கடத்தல் கும்பலிடம் இருந்து போதைப் பொருட்களை மீட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரூ.1,800 கோடி போதைப் பொருட்களை மீட்டது தொடர்பாக தீவிரவாத தடுப்பு படையினருக்கும், கடலோர காவல் படையினருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு டிஐஜி சுனில் ஜோஷி நேற்று மாலை அளித்த பேட்டியில், ‘‘போதைப் பொருட்கள் 311 பாக்கெட்களாக மூட்டையாக கட்டப்பட்டப்பட்டிருந்தன. இதன் மொத்த எடை 311 கிலோ. இவை டிரம்மில் அடைத்து எடுத்து வரப்பட்டன.

இந்த டிரம்களை கடத்தல்காரர்கள் கடலில் போட்டனர். இது தற்போது மீட்கப்பட்டு, போதைப் பொருள் பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருட்கள் பாகிஸ்தானின் பிடா என்கிற கடத்தல் கும்பல் அந்நாட்டின் பஸ்னி துறைமுகத்தில் இருந்து கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த போதைப் பொருட்கள் நடுக்கடலில் தமிழ்நாட்டிலிருந்து வரும் வேறொரு படகுக்கு மாற்றப்பட்டு அம்மாநிலத்திற்கு கடத்த கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்தனர்’’ என்றார்.

கடலோர காவல் படையினரை பார்த்ததும் கடத்தல்காரர்கள் போதை பொருள் அடங்கிய டிரம்களை கடலில் வீசிவிட்டு படகில் தப்பி சென்றதால், யாருமே கைது செய்யப்படவில்லை. ஒருவர் கூட சிக்காத நிலையில், தமிழ்நாட்டுக்குதான் அந்த போதை பொருள் கடத்தப்பட்டதாக குஜராத் போலீஸ் டிஐஜி தெரிவித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post குஜராத் கடல் பகுதியில் ரூ.1,800 கோடி போதைப்பொருள் மீட்பு: மூட்டை மூட்டையாக கடலில் வீசி தப்பிய கடத்தல்காரர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article