ஒளிமயமான முன்னேற்றம் காண ஆதிதிராவிட மக்களுக்கு துணை நிற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

1 day ago 5

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒளிமயமான முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு எப்போதும் துணைநிற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளையொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் சமத்துவ நாள் விழா நேற்று நடந்தது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்தி பிடித்து கொண்டாடும் இயக்கம்தான், திராவிட இயக்கம்.

அவர் எழுதிய ‘சாதியை ஒழிக்க வழி’ நூலை 1930ம் ஆண்டே தமிழில் வெளியிட்டவர் பெரியார். அதுமட்டுமல்ல, அம்பேத்கர் பெயரை, அவர் பிறந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்ற மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு வைக்கம் போராட்டம் நடத்திய காலகட்டத்தில், இந்தியாவிலேயே முதன்முதலாக, தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்று பெயர் சூட்டியவர் நம்முடைய கலைஞர். இந்த பாதையில்தான், அம்பேத்கர் நமக்கான அடையாளம் என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டு இருக்கிறோம்.

சமூகநீதி, சமத்துவம், தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், மக்களவையில் 2 முறையும், மாநிலங்களவையில் ஒரு முறையும் பங்கெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்தவர். அவர் இன்றைக்கு நம்முடைய இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியதற்கு என்னுடைய இதயமார்ந்த நன்றி.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் வழியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி சமூகநீதியை நிலைநாட்டுகின்ற அரசாக, நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு சமத்துவ நாளை கொண்டாடுகின்ற இந்த தருணத்தில், நான் உறுதியோடு சொல்லிக் கொள்ள விரும்புவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒளிமயமான முன்னேற்றத்திற்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எப்போதும் துணைநிற்கும். ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது, அந்த சமூகத்தில் இருக்கின்ற மாணவர்களை நாம் எவ்வளவு கண்ணுங்கருத்துமாக பார்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. நாம் மாணவர்களின் கல்விக்காக பல திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமல்ல, அதிக எண்ணிக்கையில் விடுதிகளையும் கட்டியிருக்கிறோம்.

மாணவர்களுடைய முன்னேற்றம் என்பது கண்கள் மாதிரி என்றால், பெண்களுடைய முன்னேற்றம் என்பது இதயத்துடிப்பு மாதிரி. அதைத்தான் அம்பேத்கர், ‘ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அந்த சமூகத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிடுகிறேன்’ என்று சொன்னார். அதனால்தான், பெரிதும் விவசாய தொழிலாளர்களாக இருக்கின்ற ஆதிதிராவிட மகளிரை நில உடைமையாளர்களாக மாற்றி, அவர்களுடைய சமூக நிலை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற நோக்கத்துடன், ‘நன்னிலம்’ என்ற ஆதிதிராவிடர் மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டத்தை இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், 625 பயனாளிகளுக்கு ரூ.30 கோடி மானியம் வழங்கப்பட்டு, மகளிரை நில உடைமையாளர்களாக நம்முடைய அரசு மாற்றியிருக்கிறது. அதுமட்டுமல்ல, நம்முடைய அரசின் முத்திரை திட்டமான மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்தில் அதிகம் பயனடைய கூடியவர்கள் நம்முடைய ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்த சகோதரிகள்தான். பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கான அடிப்படை வருமானம் ஈட்டுகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தாட்கோ மூலம் வழங்கப்படுகின்ற மானியத்தை 2023ம் ஆண்டு முதல் இரண்டு லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து, ரூ.6 லட்சமாக உயர்த்தியிருக்கிறோம்.

பொருளாதார முன்னேற்றத்திற்காக நான் தொடங்கி வைத்த ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில்’ 3,950 தொழில் முனைவோருக்கு ரூ.630 கோடி கடனுதவி வழங்கி இருக்கிறோம். அதில் மானியம் மட்டுமே ரூ.403 கோடி. இதில் பயனடைந்திருக்கின்ற பெண் தொழில் முனைவோருடைய எண்ணிக்கை மட்டும் 1000 பேர். அதோடு தூய்மை பணியாளர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான ‘தொழில் முனைவு’ திட்டத்தின்கீழ் 468 பயனாளிகளுக்கு ரூ.89 கோடியே 71 லட்சம் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது.

பழங்குடியின மக்களுடைய வாழ்வாதார திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.250 கோடி வீதம், நான்கு ஆண்டுகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் ‘தொல்குடி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்டோரின் கல்வி, சமூக, பொருளாதார உயர்வுக்கான அனைத்து உரிமைகளையும் நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு வழங்கி வருகிறது. இதற்கு முன்னால் இருந்த எந்த ஆட்சியிலேயும் இல்லாத சாதனைகள், இந்த திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டும் என்றால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு திட்டங்களை வழங்குவதில், நிதி வழங்குவதில், தொழில் முனைவோர்களை உருவாக்குவதில், மாணவர்களை உயர்கல்விக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதில், வன்கொடுமைகளை குறைத்ததில், சமூக, சமத்துவத்தை நிலைநாட்டுவதில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்காலம்தான் பொற்காலம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்ல முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், அமைச்சர்கள் எ.வ.வேலு, கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், எம்பி ராசா, மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் கொண்டனர்.

* விடுதியில் எம்சி.ராஜா சிலை
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். இந்த மேடையில் நம்முடைய சகோதரர் திருமாவளவன் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கிறார். காரணம் அவரும் எம்சி ராஜா விடுதியில் தங்கி படித்தவர்தான். இத்தகைய பெருமைக்குரிய விடுதியை திறந்து வைத்திருக்கின்ற இந்த நாளில், அந்த விடுதியில் முகப்புறத்தில் எம்.சி.ராஜா மார்பளவு சிலை மிக விரைவில் அமைக்கப்படும் என்றார் முதல்வர்.

* சாதிதான் தமிழினத்தை பிளவுபடுத்தும் முதலாவது சக்தி
சாதியின் பெயரால் தொடக்கூடாது, கண்ணில்படக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது, கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பதையெல்லாம் நம்முடைய கொள்கைகளால், போராட்டங்களால், இடைவிடாத பரப்புரைகளால் உடைத்து நொறுக்கிவிட்டோம். கல்வியும், படிப்பும், வேலையும், பதவியும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கையில் அதிகாரம் செலுத்தும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தியிருக்கக் கூடிய மாற்றம். ஆனால் சாதிதான், தமிழினத்தை பிளவுபடுத்தும் முதலாவது சக்தி. அந்த ஆயிரமாண்டு அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் தமிழர்கள் என்று உணர வைப்பதுதான் நம்முடைய நோக்கம் என்று முதல்வர் குறிப்பிட்டார்.

* சமூக ஒற்றுமையை கடைப்பிடிக்கும் கிராமங்களுக்கு விருது…

* திமுக அரசின் முக்கிய சாதனைகளை தலைப்பு செய்திகளாக சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்…

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மக்கள்தொகை சதவிகிதத்துக்கு ஏற்ப வழங்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய, ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட சட்டம் – மாநில ஆணையம் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்களை கொண்டு வந்திருக்கிறோம்.

* சமூக நல்லிணக்கம், சாதிப் பாகுபாடற்ற சமூக ஒற்றுமையை கடைபிடிக்கும் கிராமங்களை ஊக்குவிக்கின்ற வகையில், பத்து கிராமங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 லட்சம் வீதம் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

* கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் இருக்கின்ற, ஆதிதிராவிடர் குடியிருப்புகளில், அடிப்படை வசதிகளை மேம்படுத்துகின்ற வகையில் ஆயிரம் கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* இந்த நிதிநிலை அறிக்கையில், பத்து கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.1 கோடி வீதம் உயர்த்தி சமூக நல்லிணக்க விருது உயர்த்தி வழங்க அறிவித்திருக்கிறோம் என்று முதல்வர் கூறினார்.

The post ஒளிமயமான முன்னேற்றம் காண ஆதிதிராவிட மக்களுக்கு துணை நிற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article