
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிதிஷ் ராணாவின் அதிரடியின் மூலம் (81 ரன்கள்) 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 182 ரன்கள் அடித்தது. சென்னை தரப்பில் கலீல் அகமது, பதிரானா, நூர் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து 183 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 63 ரன் அடித்து நம்பிக்கை ஏற்படுத்தினார். கடந்த போட்டியில் 9-வது வரிசையில் களமிறங்கியதால் பெரும் விமர்சனங்களை சந்தித்த மகேந்திரசிங் தோனி இம்முறை முன்கூட்டியே களமிறங்கினார். இருப்பினும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
கடைசி 3 ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 45 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரவீந்திர ஜடேஜா, தோனி களத்தில் இருந்தனர். ஆனால் தீக்ஷனா வீசிய 18-வது ஓவரில் இவர்கள் வெறும் 6 ரன் மட்டுமே எடுத்தனர். இதனால் நெருக்கடி மேலும் அதிகரித்தது. கடைசி ஓவரின் முதல் பந்தில் தோனி (16 ரன்) கேட்ச் ஆனார்.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய சென்னை அணியால் 6 விக்கெட்டுக்கு 176 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக சென்னை அணியால் ஒருமுறை கூட 180+ ரன்களை சேசிங் செய்ய முடியவில்லை என்று இந்திய முன்னாள் வீரர் சேவாக் விமர்சித்துள்ளார். மேலும் தோனி எவ்வளவு பெரிய பினிஷராக இருந்தாலும் அனைத்து நேரங்களிலும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "2 ஓவர்களில் 40 ரன்கள் அடிப்பது என்பது கடினமான காரியம். நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், அது கடினமான வேலை. அந்த மாதிரி சூழலில் உங்களால் 1-2 போட்டிகளை மட்டுமே வெல்ல முடியும் அவ்வளவுதான். ஒரு முறை அக்சர் படேல் பந்துவீச்சில் தோனி 24 - 25 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தது நினைவிருக்கிறது.
மற்றொரு முறை இர்பான் பதானுக்கு எதிராக 19-20 ரன்கள் அடித்தார். அதுபோன்ற 1-2 போட்டிகள் மட்டுமே உங்கள் நினைவில் இருக்கும். சமீபத்திய போட்டிககளில் தோனி அந்த மாதிரி பினிஷிங் செய்து வெற்றி பெற்று கொடுத்தது நினைவில்லை. 5 ஆண்டுகளாக சென்னை அணியால் 180+ ரன்களை சேசிங் செய்ய முடியவில்லை" என்று கூறினார்.