
குயின்ஸ்லாந்து,
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வசித்து வருபவர் கார்லி எலெக்ட்ரிக் (வயது 30). புயல் மற்றும் மின்னல் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்வதில் சிறு வயது முதல் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். வானிலை மீது கொண்ட விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், மின்னல் சார்ந்த 3 கருத்துருக்களுடன் பச்சை குத்தியிருக்கிறார்.
ஆனால், இதெல்லாம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரையே. 2023-ம் ஆண்டு டிசம்பரில் புயலை படம் பிடிப்பதற்காக வீட்டுக்கு வெளியே ஓடியபோது அந்த சம்பவம் நேர்ந்தது.
அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு உள்ளது. இதுபற்றி கார்லி கூறும்போது, போதை மருந்து கொடுத்ததுபோன்று அப்போது உணர்ந்தேன். அந்த சம்பவத்திற்கு பின்னர், கால்களில் உணர்வனைத்தும் இழந்தது போன்று இருந்தது.
வியர்த்து கொட்டியது. மயக்கம் வருவது போன்ற உணர்வுடன், பரவசத்தில் இருப்பது போல் இருந்தது. ஓர் அங்குலம் கூட நகர முடியவில்லை என கூறுகிறார்.
அவருக்கு சிகிச்சையளிக்க அவசரகால மருத்துவ பணியாளர்கள் வந்தபோது, கார்லியின் கால்களும், கைகளும் நீல வண்ணத்தில் மாறியிருந்தன. தலை மற்றும் கழுத்து தவிர அவரால் எதனையும் அசைக்க முடியவில்லை.
அவர் விழித்திருந்தபோதும், சுவாசிக்க போராடியுள்ளார். கடைசியாக டாக்டர்கள் பலர் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது மட்டுமே அவருக்கு நினைவில் இருந்தது. அதன்பின்னர் பல மணிநேரம் சுயநினைவின்றி இருந்துள்ளார்.
கீராவுனோபாராலிசிஸ் எனப்படும் மின்னல் முடக்கத்திற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மின்னல் தாக்கினால் கால்களில் தற்காலிக முடக்குவாதம் ஏற்படும் நிலையை இது குறிக்கிறது. தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் பிழைத்து கொண்டார். மின்னல் தாக்குதலுக்கு பின்னர் அவர் உயிருடன் இருப்பதே அதிசயம் என பார்க்கப்படுகிறது.
சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்த பின்னர், அவருடைய கண்கள் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில், பச்சை நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்தன.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 2017-ம் ஆண்டில் இளம்பெண் ஒருவர் மின்னல் தாக்கிய பின்னர் பார்வை மேம்பட்டு விட்டது என கூறினார். அதன்பின்பு அவர் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் கூறினார்.