
திருப்பதி தாதய்யகுண்டா கங்கையம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் பக்தர்கள் ஒவ்வொரு வேடமிட்டு ஊர்வலமாக ஆடிப் பாடி ஊர்வலமாக வந்து கங்கையம்மனை தரிசனம் செய்தனர்.
நிறைவு நாளான நேற்று முன்தினம் விஸ்வ ரூப தரிசனம் நடந்தது. அதையொட்டி உற்சவர் அம்மனை பக்தர்கள் வழிபடுவதற்காக களிமண்ணால் பிரமாண்டமாக அலங்கரித்து வைத்திருந்தனர். விஸ்வ ரூப தரிசனம் முடிந்ததும் உற்சவர் அம்மனின் உருவத்தில் இருந்து சிறிதளவு மண்ணை பிரசாதமாக பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். அம்மனின் உருவத்தில் இருந்து எடுத்த மண் பிரசாதம் மிகப் பவித்ரமானதாகக் கருதப்படுகிறது. அதை பக்தர்கள் தங்களின் பூஜை அறையிலோ, பெட்டிகளிலோ வைத்தால் சுபிட்சம் உண்டாகும் என்பதும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த மண் பிரசாதத்தை நீரில் கரைத்து குடித்தால் உடல் பிணி நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
பி.பி.அக்ரஹாரம்
இதேபோல் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவிலிலும் திருவிழா நடந்தது. உற்சவர் கங்கையம்மன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊர்வலத்துக்கு முன்னால் பக்தர்கள் கோழி, ஆடு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருவிழாவையொட்டி கலாசார நடனங்கள், சிறுவர், சிறுமிகளின் வீர, தீர விளையாட்டுகள் நடந்தன.