
டெல்லி,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. 3 நாட்கள் நீடித்த இந்த சண்டையில் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இரு நாடுகளும் தாக்குதல் நடத்தின. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்திய பாதுகாப்புத்துறைக்கு கூடுதலாக 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆயுதங்கள் கொள்முதல் செய்யவும், பாதுகாப்புப்படையை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த கூடுதல் நிதி தொடர்பாக ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டில் நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு பட்ஜெட்டில் 6.81 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.