நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; அணியில் ஷமி இடம் பெறாதது ஏன்..? - வெளியான தகவல்

3 months ago 21

புதுடெல்லி,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 16ம் தேதி முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரின் போட்டிகள் முறையே பெங்களூரு, புனே, மும்பையில் நடைபெற உள்ளன.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் இன்றி களம் கண்ட இந்தியா இந்த தொடருக்கு ஜஸ்ப்ரீத் பும்ராவை துணை கேப்டனாக நியமித்துள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் முகமது ஷமி இந்த தொடருக்கான அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தொடரிலும் அவர் இடம் பெறவில்லை.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஷமி ஏன் இடம் பெறவில்லை? என்பதற்கான காரணம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நடைபெறுவதால் முகமது ஷமியின் தேவை அதிகம் இருக்காது.

அதே போன்று நியூசிலாந்து தொடருக்கு அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. அதுபோன்ற பெரிய தொடரில் முகமது ஷமி போன்ற அனுபவ வீரர் அவசியம் என்பதனாலே நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஷமி இடம் பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article