நிதிஷ் குமாருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கக்கோரி பாட்னாவில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

3 months ago 23

பாட்னா,

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு மத்திய அரசின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் வகையில், பாட்னாவின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ஒரு போஸ்டர் பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒட்டப்பட்டுள்ளது.

முதல்-மந்திரி நிதிஷ் குமார் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், இந்த போஸ்டர் விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. பீகார் மாநிலத்திற்கு நீண்ட காலம் முதல்-மந்திரியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ள நிதிஷ் குமார், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மந்திரிசபையில் விவசாயம் மற்றும் ரெயில்வே துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

நிதிஷ் குமார் கடந்த ஜனவரி மாதம் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க.வுடன் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இது எங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ கோரிக்கை கிடையாது. இது போன்ற கோரிக்கையை நிதிஷ் குமார் விரும்ப மாட்டார். அதே சமயம், நிதிஷ் குமார் எந்த உயரிய கவுரவத்திற்கும் தகுதியானவர் என்பது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்" என்றார்.

Read Entire Article