
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு நாளையோடு முடிவடைகிறது. இதையடுத்து 25-ந்தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியினை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30-ந்தேதி என்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
2025-2026ம் கல்வியாண்டில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.