சென்னை,
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் நாளை (24.01.2025) வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
'குடும்பஸ்தன்'
'நித்தம் ஒரு வானம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் மணிகண்டன் நடித்துள்ள படம் 'குடும்பஸ்தன்'. இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.
'பாட்டல் ராதா'
இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் பாட்டல் ராதா. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். குடிபோதை குடும்பத்தை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பது பற்றி தெளிவாக எடுத்துக் காட்டும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
'வல்லான்'
'கட்டப்பாவை காணோம்' என்ற படத்தை இயக்கிய மணி செய்யோன் இயக்கியுள்ள திரைப்படம் 'வல்லான்'. இந்த படத்தில் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் சுந்தர் சி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு கொலைக்கான காரணத்தை பல்வேறு கோணத்தில் கண்டுபிடிக்க முயற்சி செய்வதை, விறுவிறுப்பான கதைக்களத்துடன் திரில்லர் ஜர்னரில் இப்படம் உருவாகியுள்ளது.
'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்'
பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தங்களின் 101-வது படமாக 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஹரி பாஸ்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். இளமை ததும்பும் இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'
'சகுனி' படத்தை இயக்கிய ஷங்கர் தயாள் இயக்கியுள்ள திரைப்படம் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'. இந்த படத்தில் யோகி பாபு மற்றும் செந்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ரவணன், சுப்பு பஞ்சு, லிஸி ஆண்டனி, கோவிந்த மூர்த்தி, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'சாதக பறவைகள்' சங்கர் இசை அமைத்துள்ள இந்தப் படம் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, அரசியல் காமெடி வகைப் படமாக உருவாகியுள்ளது.
'பூர்வீகம்'
பிரைன் டச் பிலிம் பேக்டரி சார்பில் இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பூர்வீகம்'. இந்த படத்தில் கதிர், போஸ் வெங்கட், மியா ஸ்ரீ, இளவரசு, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாணக்யா இசையமைத்துள்ளார். விஜய் மோகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது.