
விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு உகந்த அற்புதமான நாள் சதுர்த்தி திதி. சிறப்பு வாய்ந்த சதுர்த்தி தினங்களில் மற்ற சக்திகளின் சேர்க்கை உண்டாகும்போது அந்த தினம் மேலும் சிறப்பானதாக இருக்கும். அந்த வகையில் பங்குனி மாதத்தின் வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினத்தை சக்தி சதுர்த்தி என்பார்கள். இந்த நாள் 'சக்தி கணபதி விரத தினமாக' கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில் நாளை (1.4.2025) சக்தி கணபதி விரத நாள் ஆகும். சதுர்த்தி திதி நாளை காலை 10.04 மணிக்கு தொடங்குகிறது. இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோருக்கு பகை, கடன், நோய் விலகும். சகல செல்வங்களும் சேர்ந்து பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
சக்தி சதுர்த்தி நாளில் கோவில்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு விநாயகரை வழிபடலாம். இதேபோல் வீட்டில் இருந்தபடியே விநாயகருக்கு எளிமையாக பூஜைகள் செய்து வழிபடலாம். வீட்டில் உள்ள பிள்ளையார் விக்ரகத்திற்கோ, பிள்ளையார் படத்துக்கோ அருகம்புல் மாலை சார்த்துவது மிகவும் நல்லது. முடிந்தால் வெள்ளெருக்கு மாலை சார்த்தலாம்.
காலையிலும் மாலையிலும் சுண்டல், சர்க்கரைப் பொங்கல், பாயசம் என நைவேத்தியம் செய்து, சிதறுகாய் அடித்து பிரார்த்தனை செய்யவேண்டும். பூஜையின்போது குடும்பமாக அமர்ந்து விநாயகர் நாமாவளி சொல்லி வழிபடலாம். விநாயகப் பெருமானின் மூல மந்திரம் தெரிந்தால் 108 முறை உச்சரிக்கலாம். இவ்வாறு எளிய முறையில் பூஜைகள் செய்தாலே போதும், சங்கடங்கள் அனைத்தையும் விநாயகர் தீர்த்துவைப்பார் என்பது நம்பிக்கை.
சக்தி கணபதி விரதம் என்பது கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வுகளில் வெற்றி பெறவும் உதவும் ஒரு விரத வழிபாட்டு முறையாகும். இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம், மனதில் தெளிவு பிறந்து, தடைகள் நீங்கி, நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். சக்தி கணபதி விரதம் மேற்கொள்வதன் மூலம், கல்வியில் சிறந்து விளங்க முடியும், தேர்வுகளில் வெற்றி பெறவும் முடியும் என்று நம்பப்படுகிறது.