
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் ஆகும். துல் ஹஜ் மாதத்தில் இந்த கடமையை நிறைவேற்ற இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகருக்கு செல்வார்கள்.
நேற்று புனித ஹஜ் பயணத்திற்காக, முதல் ஹஜ் விமானம் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா ஜித்தா நகருக்கு 200 பெண்கள் உள்பட 402 பேருடன் புறப்பட்டு சென்றது. ஒரே நாளில் 2-வது விமானம் 441 பேருடன் சென்றது.
புனித பயணம் செல்பவர்களை அமைச்சர் நாசர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி எம்.பி., தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ., தென் மண்டல ஹஜ் கமிட்டி உறுப்பினர் ஹசன் மவுலானா எம்.எல்.ஏ., ஹஜ் கமிட்டி செயலாளர் எம்.ஏ.சித்திக், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் விஜயராஜ் குமார், சிறுபான்மை நலவாரிய துணை தலைவர் இறையன்பன் குத்துஸ், அகமது அலி உள்பட ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் வழியனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'முதல் நாளாக 2 விமானங்களில் 843 பேர் ஹஜ் பயணத்தை மேற்கொண்டு உள்ளனர். சென்னையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 5,730 பேர் வருகிற 30-ந்தேதி வரை 14 விமானங்களில் புனித பயணம் செல்கின்றனர். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த 323 பேர் பெங்களூரூ, மும்பை, ஐதராபாத், கொச்சி, கோழிக்கோடு விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்கின்றனர்.
ஹஜ் பயணம் செல்லும் 200 நபர்களுக்கு ஒருவர் என்ற வீதம் ஏற்கனவே அவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு, அவர்கள் தங்கும் இடம், தேவையான உணவு, புனித பயணத்தை மேற்கொள்வதற்கான வழிக்காட்டுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றை கண்காணிக்க அலுவலகர்களை நியமித்து இருக்கிறோம். இந்த அலுவலர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு சிறுபான்மை மக்கள் மீது உள்ள அக்கறையின் காரணமாக ஒவ்வொருக்கும் ரூ.25 ஆயிரம் மானியமாக கொடுத்து வருகிறோம். இந்த ஆண்டு மட்டும் ரூ.14 கோடியே 21 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மானியம் கொடுக்கப்பட்டு உள்ளது' என கூறினார்.