
லண்டன்,
இங்கிலாந்தின் தென் கிழக்கு பிராந்தியமான ஆக்ஸ்போர்டுஷையர் நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான அந்த ராணுவ தளத்தில் முன்பு கூட்டுப்போர் பயிற்சி, வழக்கமான ராணுவ பயிற்சிகள் போன்றவை நடைபெற்றன.
ஆனால் தற்போது அந்த ராணுவ தளங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.கைவிடப்பட்ட அந்த ராணுவ தளம் தற்போது ஆயுதங்கள், வெடிமருந்துகள் வைப்பதற்காக பயன்படுகின்றது.
இந்த ராணுவ பயிற்சி தளத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. பின்னர் மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.
எனவே அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். இதற்கிடையே அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அவர்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதேசமயம் இந்த தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.