
மாமல்லபுரம்,
வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்று வருகிறது.
12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாநாட்டு திடலில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த வன்னியர் சங்க கொடியை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். இதனைத்தொடர்ந்து பாமக மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் மாநாட்டில் பேசிய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
நாம் ஆள வேண்டும், நாம் ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது. இளைஞர்களே என் பின்னால் வாருங்கள். உங்களுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு நல்ல படிப்பு, வேலைவாய்ப்பை நான் வாங்கித் தருகிறேன்.
இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன்; படித்து வேலைக்கு போ அதன் பிறகு கட்சிக்கு வா; முதலில் குடும்பத்தை பார், என்னுடைய தம்பிகள் ஒரு வழக்கு கூட வாங்க கூடாது. ஐயா உங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்துள்ளார் அதை பயன்படுத்தி படித்து வேலைக்கு செல்லுங்கள்
காடுவெட்டி குரு மாநாட்டில் இல்லாதது மிகப்பெரும் வருத்தம். காடுவெட்டி குரு மறையவில்லை, நம்முடன் இருக்கிறார்.
வெளிநாடுகளில் இருந்தும் நம் சொந்தங்கள் வருகை தந்துள்ளனர். இட ஒதுக்கீட்டிற்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் ராமதாஸ்
வன்னியர்களை வாக்குக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். காவல்துறையில் உள்ள 109 உயர் அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே வன்னியர்.
எம்.பி.சி-யில் வழங்கப்படும் 20 சதவீதத்தில் வன்னியர்கள் 12 சதவீதத்திற்கு மேல் எடுத்துக் கொள்வதாக தமிழக அரசு பொய் சொல்லி வருகிறது. ஆனால் அரசு பணியில் உள்ள உயர் அதிகாரிகளில் வன்னியர்களின் பங்கு மிக மிக சொற்பமாக உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என பாமக கோரிக்கை வைக்கிறது.
ஆனால் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனப் பொய் சொல்கிறார். புள்ளியியல் சட்டத்தின்படி ஒரு பஞ்சாயத்து தலைவர் தன் கிராமத்தில் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்? எத்தனை பேர் கல்வி கற்றிருக்கிறார்கள் எத்தனை பேர் பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை கணக்கிட உரிமை உள்ளது.
முதல்-அமைச்சருக்கும் அது போன்று மாநில அளவில் கணக்கெடுப்பு நடத்த உரிமை உள்ளது. ஆனால் முதல்-அமைச்சர் கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறார். ஆனால் ஒன்று மட்டும் நான் சொல்கிறேன் இன்று மட்டும் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால் நிச்சயம் சமூக நீதி அடிப்படையிலே இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இருப்பார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதி அதிகாரம் உள்ளிட்ட அனைத்தும் உள்ளது. ஆனால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் மனமில்லை.
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். பலமுறை ஆட்சிக்கு வருவதற்கு உதவிய வன்னியர் சமுதாயத்திற்கு தி.மு.க. துரோகம் செய்கிறது. நல்ல கல்வியை கொடுத்தால் இளைஞர்கள் நல்ல வேலைக்கு போவார்கள். மதுவுக்கு ஏன் அடிமையாகப் போகிறார்கள்? கிராமங்களை நோக்கி நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்