*அபராதம் கட்ட தயார் என ஆவேசம்
மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரத்தில் ஆய்வு பணியின்போது பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் சென்று வரவேண்டுமென கலெக்டர் உமா உத்தரவிட்ட நிலையில், தனியார் பஸ் டிரைவர் மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பஸ்கள் அங்குள்ள பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஊங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, கள ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட் பஸ்கள் இன்றி காலியாக கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். கார், லாரிகளை பார்க்கிங் செய்வதற்கா ரூ.10 கோடி மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது என ஆதங்கம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு செய்து பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் சென்ற தனியார் மற்றும் அரசு பஸ்களுக்கு ரூ.12,000 அபராதம் விதித்து எச்சரித்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று சாலையில் பயணிகளை இறக்கி விட்டவாறு நின்று கொண்டிருந்தது. அதனைக்கண்ட போக்குவரத்து அதிகாரிகள் கண்டித்துள்ளனர். அதற்கு எங்கு வேண்டுமானலும் புகார் கொடுங்கள். அபராதம் கட்டவும் தயார் என பொறுப்பற்ற முறையில் டிரைவர் பேசியுள்ளார்.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பயணிகள் கூறுகையில், குறிப்பிட்ட அந்த தனியார் பஸ் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு வந்து, கொண்டலாம்பட்டி பைபாஸ் பகுதியில் சற்று நேரம் நிறுத்தி, ஓவர் லோடு ஏற்றிய பின்னர்தான் மறுபடியும் புறப்படுகிறது.
அந்த நேரத்தை ஈடு கட்டுவதற்காக மின்னல் வேகத்தில் பஸ்சை ஓட்டி வருகிறார்கள். மேலும், நேரம் இல்லை என தெரிவித்து மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டுச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post நாமக்கல் கலெக்டர் ஆய்வு செய்த நிலையில் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் தனியார் பஸ் டிரைவர் வாக்குவாதம் appeared first on Dinakaran.