
சென்னை,
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம் மூலம் யுபிஎஸ்சி தேர்விற்கு கட்டணமில்லாமல் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு இளைஞர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், இந்தப் பிரிவு செயல்படுகிறது. அதாவது, இளைஞர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் யுபிஎஸ்சி, ரெயில்வே உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு கட்டணம் எதுவும் இன்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். அதேபோல, யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்து மெயின்ஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் வாயிலாக 25,000 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இத்திட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் தேர்விற்கு தேர்வர்களை தயார்படுத்தும் வகையில், யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கான ரூ. 25 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் தொடங்கி உள்ளது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் கீழ் உத்வித்தொகை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் வரும் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.