
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
திருத்தணி தொகுதி வாழ் மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தராத மற்றும் மக்கள் நலன் கருதி, கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டுள்ள விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளையும், நலன் பயக்கும் திட்டங்களையும் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: 14.7.2025, திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும்.
நிர்வாகத் திறனற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில், மக்களுக்குப் பயன்தரும் திட்டங்களை சரிவர நிறைவேற்றாத காரணத்தால் சொல்லொண்ணா துயரத்திற்கு மக்கள் ஆளாகி உள்ளனர். அதேபோல், மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமலும், பல்வேறு வரிச் சுமைகளை மக்கள் மீது சுமத்தியும், சர்வாதிகாரப் போக்கோடு இந்த அரசு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
அந்த வகையில், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
2021-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையில், நான்கு அடுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் முழுமை பெறாத நிலையில், கடந்த 18.4.2025 அன்று அவசர கதியில் விடியா திமுக அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைத்து இரண்டு மாதங்களாகியும் இம்மருத்துவமனை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வரவில்லை. மின் இணைப்பு இன்னும் முழுமைபெறாமல் உள்ளது. மேலும், ஸ்கேன் எடுக்கும் அறைகள் சிறிய சிறிய அறைகளாகக் கட்டப்பட்டுள்ளதால், அவை இடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு வருகின்றன. மொத்தத்தில், மக்கள் வரிப் பணம் பல்வேறு வகைகளில் வீணடிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிப்பட்டு அடுத்த கோனேட்டம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நேயாளிகள் சிகிச்சை பெற வருவதோடு, 50-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத காரணத்தால், நோயாளிகள் கடும் அவதியுறுகின்றனர். மேலும் இங்கு, புதுப்பிக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் இன்னும் பயன்பாட்டிற்கு வராத காரணத்தால், நோயாளிகள் திருத்தணி மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
அம்மா நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான கழக ஆட்சியில், திருத்தணி நகருக்கு புறவழிச் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விடியா திமுக அரசு பதவியேற்ற பிறகு இத்திட்டத்திற்கான நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்படும் பணிகள் தரமற்று இருப்பதால், சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பணிகள் சரிவர நடைபெறவில்லை. மேலும், ரெயில்வே பாதையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் இருபக்கமும் மின்விளக்கு வசதிகள் இல்லை. விபத்துப் பகுதிகள் மற்றும் பாலத்தின் அருகே போதுமான மின்விளக்கு வசதிகளும் இல்லை. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.
திருத்தணி பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு எனது ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டது. பின்னர், இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு புதிய மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள் இன்னும் முழுமைபெறவில்லை. இதனால் மக்கள் நாள்தோறும் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருத்தணி நகரில் நில அளவை செய்யப்பட்டு பணிகள் நிறைவுபெற்று விடியா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இதுநாள்வரை திருத்தணி நகரில் கிராம நத்தத்தில் வசிக்கும் 4,000 குடும்பங்களுக்கு மேல் பட்டா வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இங்கு வாழும் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
திருத்தணி தொகுதியில் நெசவுத் தொழில் செய்யும் பெரும்பாலான நெசவாளப் பெருமக்கள் வாழ்ந்து வருகின்றனர். திருத்தணி தொகுதியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்று கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுநாள் வரையிலும் நிறைவேற்றப்படவில்லை.
திருத்தணி மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருப்பாற்கடல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் இன்னும் முழுமைபெறாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படடுள்ளனர்.
ஆந்திர எல்லையில் இருந்து திருத்தணி வழியாக கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகத் தெரிகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு இந்த நிர்வாகத் திறனற்ற அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
திருத்தணி நகராட்சியில் உள்ள வீடுகள், சொத்துகள் மற்றும் வணிக கடைகளுக்கு வீட்டு வரி, குடிதண்ணீர் வரி, வணிக கடை வரி அதிக அளவில் உயர்த்தப்பட்டு, மக்களை அச்சுறுத்தி கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆட்பட்டுள்ளனர். மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், திருத்தணி தொகுதி வாழ் மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தராத மற்றும் மக்கள் நலன் கருதி, கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டுள்ள விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளையும், நலன் பயக்கும் திட்டங்களையும் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் 14.7.2025 – திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில், திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளருமான திருத்தணி அரி, திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ரமணா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், நகர, பேரூராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தராத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.