பெங்களூரு,
பிரபல கன்னட நடிகை சமிக்சா. இவர் தி டெரரிஸ்ட், 99, ஜேம்ஸ், கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா, லவ் லி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் 'ரோனி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து சமிக்சா, 'ராஷி' என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அவர், ஆதித்யா சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், சினிமாவில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாக கன்னட நடிகை சமிக்சா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்ததை பாக்கியமாக கருதுகிறேன். இதை தற்போது பலர் பெறுவதில்லை. அதே சமயம், சினிமாவில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாக உணர்கிறேன். நமது படங்கள் சில சமயங்களில் கிடப்பில் போடப்படும், சில சமயம் பாதியிலேயே நிறுத்தப்படும். இது போன்று நடப்பது என்னை போன்ற புதிய நடிகைகளுக்கு என்ன பண்ணுவதென்று தெரியாத சூழ்நிலைகளை உண்டாக்கும்.
என் பயணத்தில் இது போன்ற சவால்கள் இருந்தன. நான் சிவமோகாவைச் சேர்ந்தவள். அங்கு எனது கல்வியை முடித்துவிட்டு, நடிகையாக விரும்பி பெங்களூருக்கு வந்தேன். அப்போதுதான், 2016ல் மீனாட்சி மதுவே என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக நடிப்பதால், எனக்குக் கற்றுக்கொடுக்கும் பொறுமை அந்தக் குழுவிடம் இருந்தது.
தற்போது அந்த பொறுமை இல்லை. எபிசோடுகள் தினசரி ஒளிபரப்பப்பட வேண்டும் என்பதால், எல்லாமே வேகமாக நடக்கிறது. எனவே இப்போது தொலைக்காட்சியில் நுழைபவர்களுக்கு இது எளிதாக இருக்காது'' என்றார்.