
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தற்போது 'டாக்சிக், ராக்காயி' என்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு அம்மனாக நடித்திருந்த படம் 'மூக்குத்தி அம்மன்'. ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்திருந்த இப்படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாகி இருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் மூலம்தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆர்.ஜே. பாலாஜி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் உருவாக உள்ளது. இந்த 2-ம் பாகத்திலும் நயன்தாரா மீண்டும் அம்மனாக நடிக்க உள்ளார். பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்க உள்ளார்.
இப்படம் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இந்த நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த படத்தின் பூஜை வருகிற மார்ச் 6-ம் தேதி பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. பூஜையின் போது 15 அடி உயர அம்மன் சிலை அமைத்து, பக்தி பாடகர்களையும் வரவழைத்து, அன்னதானம் ஏற்பாடு செய்து பூஜையை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
