
நீலகிரி,
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், இதுவரை 245-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3 காவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்பட 5 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. நேற்று சம்மன் அனுப்பி இருந்தது. இதன்படி 3 காவலர்களும் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் கோத்தகிரி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் வரும் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்டேட் மேலாளர் நடராஜனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி எஸ்டேட் மேலாளர் நடராஜன் வரும் 27ம் தேதி சி.பி.சி.ஐ.டி. முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக இவ்வழக்கில் சயானை கைது செய்த காவல் உதவி ஆய்வாளர் மகேஷ் குமாரிடம், கோவையில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. சயானின் செல்போனை பறிமுதல் செய்தபோது, அதனை ஏன் பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் விசாரணை நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.