
சண்டிகர்,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் வருகிற 22-ம் தேதி மோத உள்ளது.
கடந்த 17 சீசன்களாக விளையாடியும் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாத பஞ்சாப் கிங்ஸ் அணி இம்முறை புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் புதிய தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தலைமையில் முதல் ஐ.பி.எல். கோப்பைக்கு முத்தமிடும் முனைப்பில் ஆயத்தமாகி வருகிறது.
இதில் ஸ்ரேயாஸ் கடந்த ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்றுடன் கொடுத்தார். அத்துடன் சமீப காலமாக பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதே உத்வேகத்தை தொடரும் பட்சத்தில் பஞ்சாப் கிங்ஸ் இம்முறை மற்ற அணிகளுக்கு கடும் சவால் அளிக்கும். அத்துடன் ரிக்கி பாண்டிங்கின் அனுபவமும் ஆலோசனையும் அந்த அணிக்கு கூடுதல் அம்சமாக இருக்கும்.
இந்நிலையில் தான் பயிற்சியாளராக இருந்து பார்த்த வீரர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த வீரர் என்று ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். அத்துடன் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அவரின் திறமைகளை கண்டறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஸ்ரேயாஸ் ஐயருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன். டெல்லியில் நீண்ட காலமாக எங்களுக்குள் ஒரு சிறந்த உறவு இருந்தது. நான் பணியாற்றிய சிறந்த வீரர்களில் ஸ்ரேயாஸ் ஒருவர். அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் ஐ.பி.எல். கோப்பையை வென்ற கேப்டன். இதைவிட அதிகமாக எதையும் அவரிடம் கேட்க முடியாது.
சில நாட்களுக்கு முன்புதான் அவர் எங்களுடன் இணைந்தார். ஒரு கேப்டனாக அணியில் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளார். நாங்கள் ஒரு சிறந்த அணியை ஒன்றாக இணைத்துள்ளோம். எந்த அணியிலும் கேப்டன்-பயிற்சியாளர் உறவு மிக முக்கியமானது. அந்த வகையில் எங்களிடம் மிகவும் வலுவான பிணைப்பு இருப்பதை நான் அறிவேன்" என்று கூறினார்.