
2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. இது தொடர்பான பணிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வரும் 28-ந்தேதி நடைபெற உள்ளது.
பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதன் பின்னர் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் குறித்து விமர்சித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆனந்த், "கட்சியின் தலைவர் விஜய் வழியில், அவரது அறிவுறுத்தலின்படி மக்கள் சேவை செய்வதே தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கம். மற்றவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவித்தார்.