
சென்னை,
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அமலாக்கத் துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு அஞ்சாது, என்பதை அறியாத ஆதிக்கவாதிகளின் அராஜக நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்குக் குட்டு வைத்திருக்கிறது ஐகோர்ட்டு. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிலேயே சுப்ரீம் கோர்ட்டால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட அமலாக்கத்துறை தற்போது மீண்டும் சென்னை ஐகோர்ட்டின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் போர்க்குணத்தை அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் எதிர்கொள்ளத் திராணி இல்லாத பாஜக, தனது அச்சுறுத்தல் ஆயுதத்தை அமலாக்கத்துறை மூலம் நீட்டியது. எதிர்க் கட்சிகளை மிரட்டுவதற்காக அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ, தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளைத் தனது கைப்பாவையாக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. பாஜக ஆளாத மாநிலங்களில் முகாந்திரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளைப் புனைந்து, எதிர்க்கட்சிகளை முடக்குவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர்களையும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முதல்-மந்திரிகளையும் கைது செய்து, ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவின் அடியாளாகச் செயல்படுகிறது அமலாக்கத்துறை. மோடி அரசின் 10 ஆண்டு ஆட்சியில் அரசியல் தலைவர்கள் மீது பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கை 193 ஆனால், இதுவரை 2 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது தண்டனை விகிதம் வெறும் 1.03 சதவிகிதம்தான். இதனை நாடாளுமன்றத்திலேயே பாஜக ஒத்துக் கொண்டிருக்கிறது. சோதனைகள், கைதுகள் மூலம் தனது அரசியல் எதிரிகளை மிரட்டிப் பழிவாங்கவும் அவர்களது செயல்பாடுகளை முடக்கவும் அமலாக்கத் துறை அரசியல் சதியை நடத்தி கொண்டிருப்பதை தான் தண்டனை விகிதம் வெளிக்காட்டுகிறது.
அமலாக்கத் துறையால் வழக்குகள் பதியப்பட்டவர்கள், பாஜகவில் இணைந்ததும், அவர்கள் மீதான நடவடிக்கைகள் நின்றுவிடுவது அமலாக்கத்துறையின் அறிவிக்கப்படாத விதியாகும். அமலாக்கத்துறை சோதனை நடத்துவதும் வழக்கு பதிவதும் முழுக்க முழுக்க பாஜகவுக்கு ஆள்பிடிக்க மட்டுமே. எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களைக் குறிவைத்து சோதனை நடத்துவது அதை வைத்து வழக்கு போடுவேன் எனச் சொல்லி மிரட்டி அவர்களை பாஜகவிற்கு ஆதரவாளராக மாற்றுவது என மத்திய பாஜக அரசின் அடியாள் துறையாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. பாஜகவின் இந்த பேர அரசியலுக்கு அடிபணியாதவர்களை மட்டும் சிறையில் வைத்து மிரட்டிப் பார்ப்பது என்ற மிக மிகக் கேடுகெட்ட கேவலமான வேலையை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது.
அமலாக்கத் துறையை வைத்து பூச்சாண்டி காட்டியதால் பாஜகவோடு இணைந்தவர்களைப் பட்டியல் போட்டால், சுவேந்து அதிகாரி, முகுல் ராய், ஷிண்டே, அஜீத் பவார், பிரேம் காந்த் என அவர்கள் நம்பும் அனுமார் வால் போல அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். வடக்கே அமலாக்கத்துறையை வைத்து பாஜகவிற்கு ஆள் பிடித்த பார்முலாவை இங்கே செய்து பார்க்கலாம் எனக் கணக்கு போடுகிறது பாஜக. ஆனால் முதுகெலும்பில்லாத கோழைகள் வேண்டுமானால் பாஜகவின் சித்து விளையாட்டிற்குப் பயந்து பாஜகவை ஆதரித்து அடிபணியலாம் ஆனால், ஒருகாலமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடித் தொண்டனையோ, திராவிட மாடல் அரசையோ துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.
பல மாநிலங்களில் மேற்கொண்ட அமலாக்கத்துறையின் மிரட்டல் உத்தியைத் தமிழ்நாட்டையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழ்நாட்டின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற வகையில் சோதனை மேற்கொண்டது. தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது எடுத்திருக்கும் முயற்சி நாடாளுமன்ற மட்டுமல்லாது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்து கிடைத்திருக்கும் ஆதரவு பாஜகவை நிலைகுலையச் செய்திருக்கிறது. தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டத் தொகுதி சீரமைப்பின் பெயரால் பாஜக போட்டிருந்த பாசிசத் திட்டத்தை முளையிலேயே முதல்-அமைச்சர் அம்பலப்படுத்திவிட்டார் என்ற ஆத்திரத்திரத்தில் ஆற்றாமையிலும் அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவிவிட்டுள்ளது.
வரும் 22-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிற ஆலோசனைக் கூட்டம் பாஜகவின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. அதனால்தான் அமலாக்கத் துறையை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அமலாக்கத்துறையைப் புனிதமான விசாரணை அமைப்பாகக் காட்டி வந்த பாஜகவின் பிம்பம் தமிழ்நாட்டில்தான் முதல்முறையாகத் துடைத்தெறியப்பட்டது. கொள்ளையனோடு கூட்டு சேர்ந்த காவலனாக அமலாக்கத்துறை பாஜகவோடு கூட்டு வைத்து, பாஜகவின் குற்றங்களுக்குத் துணை போய்க் கொண்டிருப்பது நாட்டிற்கு நல்லதல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.