பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 150 ரன்களும், ஆஸ்திரேலியா 104 ரன்களும் அடித்தன.
இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் அடித்தனர். ஒரு வருடம் கழித்து விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா வெற்றி பெற 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
முன்னதாக கடந்த நியூசிலாந்து தொடரில் ரன் குவிக்க முடியாமல் திணறிய விராட் கோலி பெரும் அளவில் விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் தற்போது சதம் அடித்து மீண்டும் பார்முக்கு வந்துள்ள அவர் விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சதம் அடித்த பின் விராட் கோலியிடம் ஆடம் கில்கிறிஸ்ட் மைதானத்திலேயே பேட்டி அடித்தார். அதில், " என்னுடைய ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களிலும் எனது மனைவி அனுஷ்கா சர்மா துணையாக இருந்து வருகிறார். அதனால் அவருக்கு என்ன நடக்கிறது என்பது நன்றாக தெரியும். நான் சிறப்பாக செயல்படாதபோது, எனது மனநிலை என்னவாக இருந்தது என்பதை அவர் மட்டுமே அறிவார்.
சாதனைகள் செய்ய வேண்டும் என்பதற்காக ஒருநாளும் விளையாடியதில்லை. இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் பெருமையாக நினைக்கிறேன்" என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.