சென்னை: “காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. கட்சியிலேயே இருப்பதா அல்லது கட்சியை விட்டு வேறு இடத்தில் சென்று இயங்குவதா என்று முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “கல்வி என்பது மாநில உரிமை, அதை எடுத்து வைத்துக்கொண்டு அதிகாரம் செய்வதற்கு நீங்கள் (மத்திய அரசு) யார்? மாணவர்களை படிக்க வைக்கும் உரிமைகூட மாநிலத்துக்கு இல்லை என்பது எப்படி? இதற்காகத்தான் நாங்கள் போராடி சுதந்திரம் பெற்றோமா? பிறகு மாநிலத்துக்கு என்னதான் உரிமை இருக்கிறது? எங்கள் மொழி மீது எங்களுக்கு பற்று இருப்பது தேசத் துரோகம் அல்ல. இந்தி என்ற ஒற்றை மொழியை திணித்து இந்த நாட்டை கூறு போட துடிக்கிறீர்கள் எனக் குற்றம்சாட்டுகிறேன். மொழியை வைத்து நாட்டை கூறுபோட துடிப்பது நீங்களா? நாங்களா?