புதுச்சேரி, ஜன. 21: புதுச்சேரி கோவிந்த சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரி ேகாவிந்தசாலை வாஞ்சிநாதன் வீதியில் கடந்த 19ம் தேதி அதிகாலை திடீரென பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இச்சம்பவம் குறித்து பெரியகடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் மர்ம பொருள் வெடித்த இடத்தில் ஆய்வு செய்தனர். முன்னதாக போலீசார் வருவதற்குள், அப்பகுதி மக்கள் இடத்தை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து கோலம் போட்டிருந்தனர். இதனால் மர்ம பொருள் வெடித்து சிதறியதற்கான தடயங்கள் உடனடியாக கிடைக்கவில்லை. பின்னர் இச்சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி (எ) தினேஷ் (29) பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியை சிறுவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார், சிலரை பிடித்து விசாரித்தனர். அதில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டது தெரியவந்தது. புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த லோகு பிரகாஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஸ்டிக்கர் மணி ஆகியோரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 18ம் தேதி ஸ்டிக்கர் மணி, ரவுடி லோகு பிரகாஷின் தங்கையை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த லோகு பிரகாஷ், தனது கூட்டளிகளுடன் மணியை தீர்த்து கட்ட திட்டம் தீட்டி உள்ளார். அப்போது 3 சிறுவர்கள் மூலம் அரியாங்குப்பத்தில் இருந்து யானை வெடிகளை வாங்கி, அனைத்தையும் ஒன்று சேர்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளனர்.
பின்னர் எதிரியை கொலை செய்ய இரவு முழுக்க கண்டாக்டர் தோட்டம் பகுதி முழுவதும் அந்த கும்பல் சுற்றி வந்துள்ளது. ஆனால் அவர் எங்கும் தென்படவில்லை. இதனால் மறுநாள் அதிகாலை எதிரி கிடைக்காத விரக்தியில், தயாரித்து வைத்திருந்த வெடிகுண்டை கீழே வீசி எறிந்துள்ளனர். இதில் அதிக சத்தத்துடன் அது வெடித்து சிதறியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த ஹேமந்த (18), விஜயராகவன் (18) மற்றும் 3 சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி உள்ள ரவுடி லோகு பிரகாஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட விஜயராகவன் மீது அடிதடி வழக்குகள் இருப்பது நிலுவையில் குறிப்பிடத்தக்கது.
The post நாட்டு வெடிகுண்டு வீசிய 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.