சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா?: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

2 hours ago 1

நாக்பூர்: இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டி.20 தொடரை 4-1 என இந்தியா கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக 3 ஒருநாள்போட்டி கொண்ட தொடரின் முதல் ஆட்டம் நாக்பூரில் இன்று பகலிரவு போட்டியாக தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி தொடர்பாக இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா அளித்த பேட்டி: கேஎல் ராகுல் பல வருடங்களாக இந்திய அணிக்கு விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டு வருகிறார். மேலும் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடந்த 10 அல்லது 15 ஒரு நாள் போட்டிகளை எடுத்துப் பார்த்தால் அணி அவரிடம் என்ன கேட்கிறதோ அதை அவர் சரியாக செய்திருக்கிறார். ரிஷப்பன்ட்டும் எப்படிப்பட்ட வீரர் என்று நன்றாகவே தெரியும். இருவருமே போட்டியை வென்று கொடுப்பதில் சிறந்தவர்கள்.

இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு நல்ல தலைவலி. ஆனால் கடந்த காலத்தில் நாங்கள் என்ன செய்தோம் என்பதை பார்க்கும்போது தொடர்ச்சியாக என்ன செய்துள்ளோமோ அதையே இப்போதும் செய்யப் போகிறோம். ஒரு அணியாக நாங்கள் நிற்கும் இடம் அதுதான் என்றார். சாம்பியன்ஸ் டிராபியுடன் ஓய்வு பெறப்போகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ரோகித்சர்மா, “என்ன மாதிரியான கேள்வி இது. டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஒருநாள் போட்டி வித்தியாசமான ஃபார்மட். எப்போதும் மேடு பள்ளங்கள் இருக்கும் என்பது வீரர்களான எங்களுக்குத் தெரியும். அதை எனது கேரியரில் நிறைய எதிர்கொண்டுள்ள எனக்கு இது புதிதல்ல.

ஒவ்வொரு தொடரும் ஒவ்வொரு நாளும் புதிது என்பதால் கடந்த காலத்தை பார்க்காமல் வருங்கால சவால்களை நான் எதிர்நோக்கியுள்ளேன். 3 ஒருநாள் போட்டி மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி வரவிருக்கும் நிலையில் எனது ஓய்வு பற்றி இங்கு பேசுவதில் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?. இதுபோன்ற செய்திகள் பல வருடங்களாக சென்று கொண்டிருக்கின்றன. அதற்கான விளக்கத்தைக் கொடுப்பதற்காக இங்கே நான் இல்லை. தற்போதைய போட்டிகளில் நான் கவனம் செலுத்துகிறேன். அதன் பின் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்” என்று கூறினார்.

 

The post சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா?: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article