புதுடெல்லி: ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணி 79 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்து பேசியதாவது: நமது நாட்டின் பல்வேறு பகுதிகள், வங்கதேசத்துக்கு எல்லையாக அமைந்துள்ளன. இதனால் அந்நாட்டிலிருந்து நமது நாட்டுக்குள் ஊடுருவல் எளிதாக நடந்து வருகிறது. இதை தடுப்பதற்காக வங்கதேச எல்லையை சுற்றி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் தற்போது 79 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
இன்றும் 864 கிமீ தூரத்துக்கு வேலி அமைக்கும் பணி முடிவடையவில்லை. இதில் 174.5 கிமீ தூரத்துக்கு வேலி அமைக்க முடியாத வகையில் சாத்தியமற்ற கூறுகள் நிலவுகின்றன. நிலத்தை கையகப்படுத்துதல், எல்லையோர பாதுகாப்பு வங்கதேச அமைப்பின் (பிஜிபி) ஆட்சேபம், சதுப்பு நிலம், நிலச்சரிவு ஏற்படும் நிலம் போன்ற பிரச்னைகளால் வேலி அமைப்பதில் சிக்கல் உள்ளது. வங்கதேச அரசின் ஒத்துழைப்புடன் வேலி அமைப்பதில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. எல்லை கடந்த தீவிரவாதத்தை வேரறுப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
The post ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணி 79% நிறைவு appeared first on Dinakaran.