
சென்னை,
மாணிக் ஜெய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "கைமேரா". படத்தில் கதாநாயகனாக எத்தீஷ், தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார், சவுமியா, கிருஷ்ணா நந்து உள்பட பலர் நடித்து உள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, மீரா கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, "படத்தின் ஹீரோவுக்கு கன்னடத்தில் பேசுவதா, தமிழில் பேசுவதா என குழப்பத்தில் இருக்கிறார். கன்னடத்தில் பேசினால் தப்பாக போய்விடுமோ என அவர் இருந்ததை பார்க்க முடிந்தது.
தமிழ் மண்ணில் மொழிக்கும், கலைக்கும் சம்மந்தமில்லை என்றார்.
மேலும், நிறைய இடங்களில் போதை கலாசாரம் அதிகமாகி விட்டது. சினிமாக்காரங்க உஷாராக இருக்க வேண்டும். நாட்டில் எத்தனையோ பேர் தண்ணி அடிச்சிட்டு கூத்தடிக்கிறான். அநியாயம் பண்ணிக் கொண்டிருக்கிறான். ஆனால் சினிமாகாரன் யாராவது தண்ணி அடிச்சிட்டான்னு தெரிந்தால் அன்னைக்கு அதுதான் தேசிய பிரச்சினையாகி விடுகிறது. போதை கலாசாரம் என்பது தவறுதான். நடிகர் போதைப் பொருள் விவகாரத்தில் கைதானால் தீவிரவாதி போல் சித்தரிக்கப்படுகிறார்கள். அதனால் சினிமாக்காரர்கள் உஷாராக இருக்க வேண்டும். சின்ன தவறு செய்தாலும் தேசத் துரோகம் போல் காட்டி விடுவார்கள்." இவ்வாறு அவர் பேசினார்.