
சென்னை,
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2026-ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் மக்களிடமிருந்து மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு விண்ணப்பங்களை பெற தொடங்கியுள்ளது. இந்திய ஹஜ் குழு மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் 31-ந்தேதி வரை தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து https//hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலம் கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டை போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் 2 புறப்பாட்டு தளங்களை தேர்ந்தெடுக்கலாம்.
வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி உள்ளது. ஹஜ் பயணம் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் பயணிகள் நபர் ஒருவருக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்த தயார் நிலையில் இருப்பதுடன், தங்களிடம் செல்லத்தக்க பாஸ்போர்ட் உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஹஜ் பயணிகள் மரணம் அல்லது கடுமையான மருத்துவ நோய் தவிர வேறு காரணத்திற்காக பயணத்தை ரத்துசெய்ய நேரிட்டால் அபராதம் விதிக்கப்படும். எனவே, கவனமாக பரிசீலித்த பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.