
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான். தனது கெரியரில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக அமீர் கான் வலம் வருகிறார்.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்றுவரும் உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டின் (WAVES) இரண்டாம் நாளில் அமீர்கான் பங்கேற்று பேசினார். அவர் கூறுகையில்,
"நம் நாட்டின் பரப்பளவையும் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு பார்க்கையில் இந்தியாவில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே திரையரங்குகள் உள்ளன. சுமார் 10,000 திரையரங்குகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதில் பாதி தெற்கிலும், மீதி பிற பகுதிகளிலும் உள்ளன. ஆனால் நம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட அமெரிக்காவில் 40,000 திரையரங்குகள் உள்ளன. சீனாவில் 90,000 உள்ளன.
திரைப்படங்களை விரும்பும் நாடாக கருதப்படும் நம் நாட்டில், 2 சதவீத மக்கள் மட்டுமே திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கிறார்கள். மீதமுள்ள 98 சதவீதத்தினர் எங்கே படம் பார்க்கிறார்கள்?.
இந்தியாவின் கொங்கண் போன்ற பல பகுதிகளில் திரையரங்குகளே இல்லை. அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் திரைப்படங்களைப் பற்றிக் கேள்விப்படுவார்கள். ஆனால் அவற்றைப் பார்க்க வழி இல்லை. அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனவே நாம் திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். முதலில் செய்ய வேண்டியது அதைத்தான் ' என்றார்.