
தருமபுரி,
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள ஆர்.கோபிநாதம்பட்டியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பணம் எடுத்து வருகிறார்கள். நேற்று காலை அப்பகுதி பொதுமக்கள் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றனர். அப்போது அந்த ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மொரப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண லீலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் வந்து உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டார்.க்ஷஅப்போது ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பரையால் உடைக்க முயற்சித்தும், பணம் எடுக்க முடியாததால் மர்ம நபர்கள் தப்பி சென்றதும் தெரியவந்தது. இதன் காரணமாக அதில் இருந்த பணம் கொள்ளை போகாமல் தப்பியது.
மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்கள் மற்றும் மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மையத்தில் இருந்து சிறிது நேரம் ஓடி விட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.