
புதுடெல்லி,
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தினார்.
அதே நேரம் பாகிஸ்தானும் சில ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இந்தியாவும் ஏவுகணை சோதனை நடத்தியதுடன், போர் விமானங்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் பிரதமர் மோடியை, பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த சந்திப்பில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டம் முடிந்த சில மணி நேரத்தில், மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை நடத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
போர்க்கால ஒத்திகை என்பது, எதிரி நாட்டின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை எப்படி செய்வது, ஆயுதக்கிடங்குகள், தகவல் தொடர்பு மையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை மறைப்பது, சைரன் ஒலி எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்வது என்பது போன்ற செயல்முறைகள் குறித்து பயிற்சி அளிப்பது. மேலும் போர்ச்சூழலை உளவியல் ரீதியாக எதிர்கொள்ள தயார்படுத்துதலும் இதன் ஒரு பகுதியாகும்.
போர்க்காலங்களில் 244 இடங்கள் சிவில் பாதுகாப்பு இடங்களாக கடந்த 2010-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு இருந்தது. அந்த 244 இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த 244 இடங்களும் பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர், மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் போர்க்கால ஒத்திகையை எப்படி நடத்துவது என்பது குறித்து விவாதிக்க மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடு முழுவதும் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள 244 சிவில் பாதுகாப்பு இடங்களுடன் கூடுதலாக சில இடங்களையும் சேர்த்து நாடு முழுவதும் 259 இடங்களில் இன்று போர்க்கால ஒத்திகை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் மாவட்ட கட்டுப்பாட்டாளர்கள், மாவட்ட அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு வார்டன்கள், தன்னார்வலர்கள், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ். நேரு யுவகேந்திரா அமைப்புகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதனிடையே காஷ்மீர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நேற்று இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தல்படி தமிழகத்தில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய 2 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தவிர ராணுவம் சார்ந்த சில பகுதிகளிலும் ஒத்திகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படை தளத்திலும் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. போர்ப்பதற்றம் காரணமாக சூலூர் விமான நிலையமும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்ற போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 1971-ம் ஆண்டு வங்காளதேசத்தை பிரிப்பதற்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தபோது நடத்தப்பட்டது. அதன் பின்னர் 54 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாடு முழுவதும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையை தொடங்கி உள்ளனர். மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் இணைந்து ராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்னும் சற்றுநேரத்தில் போர்க்கால ஒத்திகை தொடங்க உள்ளது. கல்பாக்கத்தில் பல்துறை வீரர்கள், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஆகியோர் ஒத்திகைக்காக வருகை தந்துள்ளனர். போர்க்காலத்தில் அணுமின் நிலையம் தாக்கப்பட்டால் எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஒத்திகை நடபெற உள்ளது.