
சென்னை,
நாடு முழுவதும் நாளை (புதன்கிழமை) வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜூலை 9ம் தேதி) நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இதுதொடர்பாக தொ.மு.ச. தொழிற்சங்க பேரவையின் பொதுச்செயலாளர் மு.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் பிரச்சினைகளை விவாதிப்பதற்கு இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப்பின் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த 'இந்தியா தொழிலாளர் மாநாடு' 2015-ம் ஆண்டு முதல் கூட்டப்படவில்லை.
இந்திய நாட்டு தொழிலாளிகள் 100 ஆண்டுகளுக்கு மேலாக போராடி பெற்ற பணியிட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் முழுமையாக தொழிலாளர்களுக்கு பயன்தரவில்லை என்றாலும், அந்தச் சட்டங்களை முன்வைத்து, தங்கள் உரிமைகளை பெற்று வந்தனர். அத்தகைய 44 சட்டங்களில் 29 சட்டங்கள 4 தொகுப்புகளாக மாற்றப்பட்டு உள்ளன.
இச்சட்டத் தொகுப்புகள் நடைமுறைக்கு வந்தால், 80 சதவீதமான தொழிலாளர்கள் சட்ட வரம்புக்கு வெளியே இருப்பார்கள் என்கிற அபாயமும், அதன் காரணமாக வேலை நீக்கம், ஆட்குறைப்பு, ஆலை மூடல் போன்றவைகளுக்கு அரசின் அனுமதி பெறாமலேயே நடைமுறைப்படுத்த முடியும் என்கிற அபாயமும் உள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டதன் காரணமாக பொது போக்குவரத்து என்கிற அமைப்பு பாதுகாப்பற்றதாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உள்ளிட்ட17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்தத்தில் அனைத்து பிரிவு தொழிலாளர்களும் கலந்துகொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
பஸ், ஆட்டோக்கள் ஓடுமா?
ஆளுங்கட்சியான தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் நாளை இயக்கப்படாது என்று தெரிகிறது.
அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவார்கள். எனவே குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படலாம் என்று தெரிகிறது.
சி.ஐ.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். எனவே பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை. வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு இதுவரையில் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.
அரசு ஊழியர் சங்கங்களின் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் 25 கோடிக்கு அதிகமானோர் பங்கேற்பார்கள் என அனைத்து இந்திய வர்த்தக காங்கிரஸ் நிர்வாகி அமர்ஜீத் கவுர் தெரிவித்தார்.மேலும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக வங்கித்துறை அறிவித்து உள்ளது. இதைப்போல காப்பீடு துறையும் போராட்டத்தில் இணைவதாக அறிவித்து உள்ளன.