புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால் 54 ஆண்டுகளுக்கு பிறகு நாடு முழுவதும் 300 மாவட்டங்களில் இன்று போர்க்கால ஒத்திகை நடத்துவது குறித்து அனைத்து மாநில தலைமை செயலர்களுடன் ஒன்றிய உள்துறை செயலர் ஆலோசனை நடத்தினார்.கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டி, உரிய பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்து ஏவுகணை பரிசோதனை நடத்தி வருகிறது.
போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், நாட்டு மக்களின் பாதுகாப்பு சார்ந்த போர்க்கால ஒத்திகையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று இந்தப் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஒத்திகையின்போது, வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலியை ஒலிக்கச் செய்து, மக்கள் தங்களை காத்துக்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றச் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒத்திகையின்போது ஏர் சைரனை ஒலிக்கச் செய்து மக்களை ‘அலர்ட்’ செய்வது, செடி கொடிகளுக்கு இடையே மறைந்து கொள்வது, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான புதிய மேம்படுத்தப்பட்ட திட்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என ஒன்றிய உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பாதுகாப்பு ஒத்திகை குறித்து ஒன்றிய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த பாதுகாப்பு ஒத்திகையானது நாடு முழுவதும் கிட்டத்தட்ட 300 மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அங்கு நடத்தப்படும் பாதுகாப்பு பயிற்சிகள் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கிராம அளவில் கூட இந்த பாதுகாப்பு ஒத்திகை அளிப்பது குறித்த பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை இயக்குதல், பொதுமக்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளித்தல், பதுங்கு குழிகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அணுமின் நிலையங்கள், ராணுவத் தளங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், நீர்மின் அணைகள் போன்ற இடங்களிலும் இந்த ஒத்திகை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ரயில்வே மற்றும் மெட்ரோ அதிகாரிகள், சீருடை அணிந்த காவல்துறை, துணை ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரும் இந்த ஒத்திகை பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். 54 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த பயிற்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
* போர்க்கால ஒத்திகை என்றால் என்ன?
வான் வழி தாக்குதல், போர், ஏவுகணை தாக்குதல் உள்ளிட்ட நேரங்களில் மக்களும், அரசு நிர்வாகமும் எப்படி அதனை எதிர்கொள்கிறது என்பதை அறிவதற்காக நடத்தப்படுவது. மக்களின் பயத்தை குறைப்பது, குழப்பங்களை தவிர்ப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரிழப்புகளை குறைப்பது உள்ளிட்டவற்றை அடிப்படை நோக்கமாக கொண்டதே தத்ரூபமான போர் ஒத்திகை. இதன் மூலம், அதிகாரிகளும், பொதுமக்களும் போர் காலத்தில் தங்கள் பங்கு என்ன என்பதை ஆழ்ந்து அறிந்துகொள்வதுடன், இந்த ஒத்திகையின் மூலம், ஏதேனும் இன்னும் மேம்படுத்த வேண்டியது இருந்தால் அதனை கண்டறிந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
* என்னவெல்லாம் நடக்கும்?
தற்காலிக மின் தடை
செல்போன் சிக்னல்கள் நிறுத்தம்
போக்குவரத்து நிறுத்தம்
சில இடங்களில் மக்களை வெளியேற்றுதல்
* செய்ய வேண்டியவை என்ன?
போர் ஒத்திகை நடக்கும் போது பதற்றப்படாமல், அதிகாரிகள் தெரிவித்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தண்ணீர், மருந்துகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை தயார் செய்துவைத்துக்கொள்ள வேண்டும்.
மின்சாரம் அல்லது இணைய சேவை திடீரென சிறிது நேரம் தடைபட்டால் அச்சம்கொள்ளக் கூடாது.
உறுதிப்படுத்தப்படாத அல்லது வதந்திகளை சமூக வலைதளங்களில் பகிராமல் இருக்க வேண்டும்.
வானொலி அல்லது அரசு செய்தி நிறுவனங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்.
The post நாடு முழுவதும் இன்று நடக்கிறது 300 மாவட்டங்களில் போர்க்கால ஒத்திகை: தலைமைச்செயலாளர்களுடன் ஒன்றிய உள்துறை செயலாளர் ஆலோசனை 54 ஆண்டுகளுக்கு பின் நடப்பதால் பரபரப்பு appeared first on Dinakaran.