மாமல்லபுரத்தில் 11ம் தேதி பாமக மாநாடு இசிஆர் சாலை வழியாக 39 கி.மீ வாகனங்கள் செல்வதற்கு தடை: விழுப்புரம் காவல்துறை உத்தரவு

4 hours ago 3

விழுப்புரம்: மாமல்லபுரத்தில் 11ம் தேதி பாமக மாநாடு நடைபெறும் நிலையில் இசிஆர் சாலையில் சுமார் 39 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது. பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு வரும் 11ம் தேதி மாமல்லபுரம் பகுதியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு செல்லும் வாகனங்களுக்கு காவல்துறை தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி வன்னியர் சங்கத்தின் இளைஞர் பெருவிழாவுக்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாமகவினர் வாகனங்களில் சென்றனர்.

அப்போது மரக்காணம் பகுதியை சேர்ந்த சிலருக்கும், இளைஞர் சங்க மாநாட்டுக்கு சென்ற பாமகவினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின்போது சாலையில் நின்றிருந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அதோடு அரசு பஸ்கள் உள்பட சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கலவர சம்பவத்துக்கு பிறகு கடந்த 11 ஆண்டுகளாக மாமல்லபுரத்தில் மாநாடு நடத்தப்படவில்லை. இந்நிலையில் வரும் 11ம் தேதி மாமல்லபுரத்தில் பாமக, வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பாமக தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் செல்லக்கூடும் என்பதால் 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலவரத்தின் எதிரொலியாக தற்போதும் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விழுப்புரம் மாவட்ட காவல்துறை சில நிபந்தனைகள் விதித்துள்ளது.

அதன்படி மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் மாநாட்டில் பங்கேற்க வாகனங்களில் செல்பவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டக்குப்பம் முதல் தாழங்காடு வரையுள்ள 39 கி.மீ. தூரமுள்ள சாலையில் செல்வதற்கு தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் கடலூர், புதுச்சேரி மார்க்கங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் திண்டிவனம், மதுராந்தகம் வழியாக மாநாட்டு திடலை சென்றடைய வேண்டும். மாநாட்டுக்கு செல்லக்கூடிய வாகனங்களில் ஒலிப்பெருக்கி பயன்படுத்தக்கூடாது, கோஷமிட்டு செல்லக்கூடாது, வாகனங்களில் மதுபாட்டில்கள், ஆயுதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்று உத்தரவுகள் காவல்துறை தரப்பில் வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post மாமல்லபுரத்தில் 11ம் தேதி பாமக மாநாடு இசிஆர் சாலை வழியாக 39 கி.மீ வாகனங்கள் செல்வதற்கு தடை: விழுப்புரம் காவல்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article