புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பு இளைஞர்கள் மோதல் காவலர் உள்பட 20 பேர் காயம்: வீடுகள் சூறை, தீவைப்பு ; பஸ், போலீஸ் கார் கண்ணாடி உடைப்பு, 15 பேர் கைது

5 hours ago 2

புதுக்கோட்டை: கோயில் திருவிழாவில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் காவலர் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 15 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, பெட்ரோல் பங்கில் யார் முதலில் பெட்ரோல் போடுவது என்பதில் 2 பேருக்கு இடையே ஏற்பட்ட தகராறு இருதரப்பினர் இடையே மோதலாக மாறியது.

இதில் ஒரு தரப்பு இளைஞர்களை மற்றொரு தரப்பு இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதில், ஆத்திரமடைந்தவர்கள் தங்களை தாக்கியவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று, அங்குள்ள ஒரு குடிசைக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து ஆலங்குடி தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இந்த மோதலில் ஒரு பிரிவை சேர்ந்தவரின் ஒரு குடிசை வீடு, இரண்டு பைக் தீயிட்டு எரிக்கப்பட்டது. தொடர்ந்து 2 கார்கள், 5 வீடுகள் சூறையாடப்பட்டன. மேலும், ஒரு அரசு பேருந்து, போலீசார் வாகனம் மீது கல் வீசி தாக்கப்பட்டது. தாக்குதலில் காவலர் முத்துகிருஷ்ணன், 6 பெண்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை எஸ்பி அபிஷேக் குப்தா தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வடகாட்டில் குவிக்கப்பட்டு இந்த மோதல் பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதல் தொடர்பாக ஒரு பிரிவை சேர்ந்த 14 பேரையும், மற்றொரு தரப்பை சேர்ந்த ஒருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், பிரச்னை நடந்த பகுதியை அமைச்சர் ரகுபதி, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், அமைச்சரிடம் பிரச்னைகளை எடுத்து கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ரகுபதி, உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர், 6 பெண்கள் உட்பட 20 பேரையும் அமைச்சர் ரகுபதி பார்த்து ஆறுதல் கூறினார்.

மோதலில் அரசு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து, வடகாடு பகுதி வழியாக அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினரிடம் இருந்து தகவல் வரும் வரை பேருந்துகள் இயக்கப்படாது என்றும் புதுக்கோட்டை மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்னை எதிரொலியாக வடகாடு, கொத்தமங்கலம் மற்றும் புள்ளான்விடுதி ஆகிய பகுதிகளில் உள்ள 3 டாஸ்மாக் கடைகள் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் மூடப்பட்டன.

* வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: போலீஸ் எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்ட போலீசார் விடுத்துள்ள அறிக்கை: வடகாடு சம்பவத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னையில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீ வைப்பு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு, பேருந்துகள் கண்ணாடி உடைப்பு, போலீசார் நான்கு பேர் காயம், காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டு என எக்ஸ் தளத்தில் செய்தி பரவுகிறது. ஆனால், பெட்ரோல் பங்கில் பேட்ரோல் போட வந்த இருவரில் யார் முதலில் பெட்ரோல் போடுவது என்ற பிரச்னை. இரு சமூக பிரச்னையாக மாறியதுதான் மோதலுக்கு காரணம்.

இந்த பிரச்னையில் ஒரு கூரை வீடு எரிக்கப்பட்டதோடு, அரசு பேருந்து கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. போதையில் இரு தரப்பு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான் பிரச்னைக்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, எக்ஸ் வலைதலத்தில் பரவும் செய்திகள் வெறும் வதந்தி. அதை நம்ப வேண்டாம். அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பு இளைஞர்கள் மோதல் காவலர் உள்பட 20 பேர் காயம்: வீடுகள் சூறை, தீவைப்பு ; பஸ், போலீஸ் கார் கண்ணாடி உடைப்பு, 15 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article