
கொழும்பு,
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் (2 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் குவித்தது. பின்னர் 343 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 48.2 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா தரப்பில் ஸ்னே ராணா 4 விக்கெட்டுகளும், அமன்ஜோத் கவுர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
முழு அணியையும் குறிப்பாக பேட்ஸ்மேன்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்பினோம். நாங்கள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். அதன்படி நாங்கள் விளையாடிய விதத்தில் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் ஒருபோதும் மேம்படுவதை நிறுத்த விரும்பவில்லை, பேட்டிங், பவுலிங் அல்லது பீல்டிங் என பல பகுதிகளில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட முடியும்.
எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து காயமடைகிறார்கள், அதை நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும், பயிற்சியாளர்கள் அதில் பணியாற்றி வருகின்றனர்.நானும் ஸ்மிருதியும் தவிர மற்ற பேட்ஸ்மேன்களும், அவர்கள் பேட்டிங் செய்த விதம் மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்நே ராணா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். இலங்கையில் உள்ள சூழ்நிலையை கணித்து அதற்குப் பழகி, இந்த கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.