
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை 15.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்தனர். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பின்னர் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது, சில சி.எஸ்.கே ரசிகர்கள் நான் விளையாடும் விதத்தை பார்த்து எனக்கு உற்சாகம் அளித்தனர். அவர்கள் கிரிக்கெட்டை ரசிக்க கூடிய ரசிகர்கள். அதுதான் இந்த வான்கடே மைதானத்தின் சிறப்பம்சமாகும். எனது பேட்டிங்கை பொருத்தவரை எனக்கு எளிய விஷயங்களை செய்வதும் தெளிவான மனநிலையில் இருப்பதும் மிகவும் முக்கியம்.
நாம் எப்படி விளையாட வேண்டும், இன்னிங்ஸ் எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதுதான் போட்டியில் கவனிக்க வேண்டிய விஷயமாகும். கடைசி இரண்டு அல்லது மூன்று ஓவர்களில் இம்பேக்ட் பிளேயராக வருவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. 17 ஓவர்கள் களத்தில் இல்லாத போது அப்படி வருவது எளிதான விஷயம் கிடையாது. ஆனால், நான் உடனே பேட்டிங் செய்ய வேண்டும் என்று எனது அணி விரும்பினால் அது குறித்து எனக்கு கவலை இல்லை.
என்னை பொருத்தவரை கடைசி வரை இருந்து போட்டியை வெற்றிகரமாக முடிப்பதே எனக்கு முக்கியம். அதுவே எனக்கு திருப்தி தர கூடிய விஷயமாக இருக்கிறது. நாங்கள் இப்போது சரியான நேரத்தில் வெற்றிகளை பெற்று வருகிறோம். தொடர்ச்சியான மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.