
மதுரை,
மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டு, மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் மழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருந்தது.
இதனை முன்னிட்டு, அந்த பகுதியில் மின் தடையும் ஏற்பட்டது. இதனால், வீட்டில் இருந்தவர்களில் சிலர் வெளியே வந்து அமர்ந்து பேசி கொண்டு இருந்துள்ளனர்.
இதன்படி, நேற்றிரவு 7 மணியளவில் வீட்டின் வாசலில் அமர்ந்து அம்மா பிள்ளை என்பவர், அவருடைய பக்கத்து வீட்டில் வசித்த வெங்கட்டி அம்மாளுடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது, அம்மா பிள்ளையின் பேரன் வீரமணியும் (வயது 10) உடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் மழையால், வீட்டின் ஒரு பக்க சுவர் சுவர் இடிந்து விழுந்தது. சுவரின் இடிபாடுகள், இந்த 3 பேரின் மீது விழுந்ததில் அவர்கள் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் வெங்கட்டி சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விட்டார். மற்ற 2 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் இன்று உயிரிழந்தனர். இதனால், சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் சிக்கி ஒரே தெருவில் 3 பேர் பலியாகி உள்ளனர்.