
சர்வதேச யோகா தினம் உலகளாவிய நல்வாழ்வு இயக்கமாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை ஒன்றிணைக்கும் யோகா தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், யோகாசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்.
யோகாசன பயிற்சிகள் உடலின் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் கருவியாக திகழ்கிறது. உடலின் ராஜ உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், இதயம், சிறுநீரகம் மற்றும் அனைத்து உறுப்புகளையும் சீராக இயக்குகிறது. நரம்புகளை பலப்படுத்தி ரத்த ஓட்டத்தை செழுமையாக்குகிறது. எலும்புகள் வலுப்பெறுகிறது. கழுத்து வலி, முதுகு வலி, மூட்டு வலி போன்றவற்றுக்கு தீர்வு கிடைக்கிறது. மூச்சை உள்வாங்கி, வெளிவிட்டு பயிற்சி செய்வதால், நுரையீரல் நன்றாக சுருங்கி விரிந்து சுவாசத்தை சீராக்குகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. தூக்க மாத்திரைகளை பயன்படுத்த தொடங்கியவர்கள், அதனை தூக்கி எறிந்துவிட்டு ஆழ்ந்து தூங்கலாம். மது, புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
உடலுடன், மனதும் வலிமை பெறும் பயிற்சியாக யோகா திகழ்வதால் சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது. மனசோர்வு, கவனசிதறல், பதற்றம் போன்றவை குறைகிறது. புத்துணர்ச்சி மலர்கிறது. மனது ஒருநிலைப்படுவதால் மாணவர்கள் படிப்பில் சிறப்பான கவனம் செலுத்த முடிகிறது. அலுவலக வேலை செய்பவர்களின் பணித்திறன், நிர்வாகிகளின் ஆளுமை திறன் அதிகரிக்கிறது. நன்மைகள் ஆயிரம், ஆயிரமாக கொட்டி கிடப்பதால் யோகாவின் மகத்துவத்தை உலக நாடுகள் உணர தொடங்கி உள்ளன.
உடற்பயிற்சிகள், விளையாட்டுகளில் ஏற்படுவது போல யோகா பயிற்சியிலும் காயங்கள் உண்டு என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் மற்ற உடற்பயிற்சிகளை விட இதில் ஏற்படும் காயத்தின் சதவீதம் மிகக்குறைவு தான். முறையற்ற பயிற்சிகள் மூலம் தசைப்பிடிப்பு, முழங்கால், மணிக்கட்டு, தோள்பட்டை, இடுப்பு காயங்கள் ஏற்படுகிறது. எனவே முறையான பயிற்சியாளர்களின் ஆலோசனையின் பேரில் யோகாவை செய்ய வேண்டியது அவசியம்.
அதிக சிரமம் எடுத்து ஆசனங்களை செய்யக்கூடாது. சிறுவயது முதல் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவர்களின் உடல் முதுமையிலும் வில்லாக வளையும். சிறுவயதை தாண்டி யோகாவை தொடங்குபவர்கள், முடிந்த அளவுக்குத்தான் உடலை வளைக்க வேண்டும். எந்த ஆசனங்களையும் முடிந்த அளவுக்குத்தான் செய்யவேண்டும். பொறுமையாக செய்வது மிக முக்கியம். இதன் மூலம் காயங்களை முற்றிலும் தவிர்க்கலாம்.
பயிற்சி செய்ய உகந்த நேரம்
யோகா பயிற்சி செய்யும்போது உடலில் வெப்பம் ஏற்படுவது உண்டு. எனவே வெளிவெப்பம் அதிகமாக இருக்கும்போது இந்த பயிற்சியை செய்யக்கூடாது. அதிகாலை, காலை, மாலை நேரங்களில் செய்யலாம். அதாவது காலை 8.30 மணிக்குள்ளும், மாலை 4.30 மணிக்கு பிறகும் யோகா செய்வது உகந்ததாக கருதப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பொழுது விடியும் நேரத்திலும், பொழுது சாயும் நேரத்திலும் யோகா பயிற்சி செய்தால் அதிக பலனை பெறலாம். காற்றோட்டமான இடத்தில் யோகா செய்யவேண்டும். ஆசனங்கள் செய்யும்போது கண்டிப்பாக வாயை மூடி வைத்திருக்கவேண்டும். காற்றை மூக்கு வழியாகவே உள்ளே இழுக்கவும், வெளியே விடவும் வேண்டும்.