நரசிம்ம மஹாபிரபு அற்புதமான தோற்றம் உடையவர். அவர் தோற்றத்தையும், கல்யாண குணங்களையும், வேத வேதாந்தங்கள் வர்ணிக்கின்றன. நரசிம்மர் 74 விதமான வடிவங்களில் இருப்பதாகச் சொல்கின்றார்கள். ஆனால், பொதுவாக ஒன்பது விதமான நரசிம்மர் உருவங்கள் இருக்கின்றன. அவற்றை பல தலங்களில் நாம் தரிசிக்கலாம். “நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை”. மிகப்பெரிய வரப்பிரசாதி நரசிம்மர். எந்தக் கோரிக்கையையும் உடனடியாகத் தீர்த்து வைப்பவர். நம்மை ஆபத்தில் இருந்து காப்பவர். துயரத்தில் ரட்சிப்பவர். பயத்தை நீக்குபவர். கேட்கும் அனைத்தையும் அருள்பவர்.நரசிம்மரின் ஜெயந்தி மகா உற்சவம் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசி சுவாதித் திருநாள் அன்று வருகிறது.ஜோதிட சாத்திரத்தில் சுவாதி நட்சத்திரம் ஒப்பற்ற நட்சத்திரம். தோஷம் இல்லாத நட்சத்திரம். சப்தரிஷி மண்டலத்தின் தென்கிழக்கில் சுடர் வீசும் நட்சத்திரம். பெரிய மகான்களுடனும், ஆசார்யர்களுடனும் தொடர்புடையது. சுவாதி நட்சத்திரத்தின் சிறப்புபற்றி ராமாயணத்தில் ஒரு குறிப்பு வருகிறது. அனுமனின் வேகத்தையும் ஆற்றலையும் வான்மீகி ராமாயணத்தில் குறிப்பிடும்போது, ‘‘வானில் ஸ்வாதி நட்சத்திரம் முன்னேறுவதைப்போல் நான் செல்வேன்’’ என்று அனுமன் கூறுவதாக வருகிறது. அப்படிப்பட்ட நட்சத்திரத்தில் தோன்றிய நரசிம்மருக்கு ஏராளமான திருக்கோயில்கள் இந்தியா முழுதும் உண்டு. அதில் சில திருத்தலங்களை பற்றிய குறிப்புக்களின் விரைவுத் தொகுப்பு தான் இந்தக் கட்டுரை.
* சிங்கவேள் குன்றம் (அகோபிலம்)
திருமங்கை ஆழ்வாரால் பாடப் பெற்ற அற்புதத் தலம் இது. ஆந்திர மாநிலத்திலுள்ளது. நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலம் என்று இத்தலத்தைச் சொல்லுகின்றார்கள். இரண்யன் ஆண்ட இடம், பிரகலாதன் வாழ்ந்த இல்லம், கல்வி கற்ற இடம் போன்றவை இங்கு உள்ளன. கருடனுக்கு, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் காட்சி தந்தான். அதனால் நவ நரசிம்மத் தலங்கள் என்றும் அழைப்பார்கள். ஒன்பது நரசிம்ம மூர்த்தங்களும் சுயம்பு வடிவங்களே! தாயாரின் திருநாமம் அமிர்தவல்லி. நரசிம்மனின் பேரருளைப் பெற்றுத் தருபவர்.
1. அகோபில நரசிம்மர்: உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.
2. பார்க்கவ நரசிம்மர்: மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார்.
3. யோகானந்த நரசிம்மர்: மலைமீது, தென்கிழக்குத் திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். இரணியவதம் முடிந்து நரசிம்மர் இங்கே யோகநிலையில் அமர்ந்துள்ளார்.
4. சத்ரவத நரசிம்மர்: கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். இக்குடைவரை கோயிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர்.
5. வராக நரசிம்மர்: பாபநாசினிநதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோயில் கொண்டுள்ளனர். இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத்தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினிநதி ஓடி வருவதையும் காணலாம்.
6. கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்: மேல் அகோபிலத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளார். கையில் வில்லேந்தியுள்ளதால் நரசிம்மர் இப்பெயர் பெற்றார்.
7. மாலோல நரசிம்மர்: அகோபிலத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் கொண்டுள்ளார். ‘‘மா’’ என்றால் லட்சுமி. ‘‘லோலன்” என்றால் அன்புடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை மகாலட்சுமி பிரார்த்தனை செய்து நீக்கினாள். லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராக இங்கு காட்சி கொடுக்கிறார்.
8. பாவன நரசிம்மர்: அகோபிலத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.
9. ஜ்வாலா நரசிம்மர்: மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. இந்த நரசிம்மரைத் தரிசிக்க செல்வது எளிதல்ல. பாதுகாப்புடன் மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.
* திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கம்
திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயிலின் பின் பகுதியில் தனி சந்நதியில், யோக நரசிம்மராக அருள் புரிகின்றார். அத்திரி முனிவருக்கு காட்சி தந்த இவரை ‘‘தெள்ளிய சிங்கம்’’ என்று திருமங்கையாழ்வார் குறிப்பிடுகின்றார். இவருக்கு தனிக் கொடி மரம் உள்ளது. யோகத்தில் உள்ளதால் இவருடைய சந்நதி கதவுகளுக்கு மணி கிடையாது. இந்த நரசிம்மரின் அபிஷேக தீர்த்தத்தை முகத்தில் தெளித்துக் கொண்டால் மன நோய்கள் அகன்று தெளிவு ஏற்படும். ‘‘தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை திருவல்லிக்கேணி கண்டேனே’’ என்று இவரை மங்களாசாசனம் செய்கின்றார் திருமங்கையாழ்வார். இந்த அழகிய சிங்கப்பெருமாளுக்குத் தெளிசிங்கப்பெருமாள் என்று திருநாமம் வழங்கலாயிற்று; துள சிங்கப்பெருமாள் என்று பலரும் வழங்குவது தவறாகும்.
* சிங்கப்பெருமாள் கோயில் (பாடலாத்ரி)
இந்த தலத்துக்கு பெயர் சிங்கப்பெருமாள் கோயில் (பாடலாத்ரி) என்று பெயர். பாடலாத்ரி என்றால் செந்நிற குன்று எனப் பொருள். இரணியணை வதம் செய்த பின்னர் கையில் படிந்த குருதியை இங்குள்ள ஏரி நீரில் கழுவினார் என்பது தலபுராணக் குறிப்பு. அதன்பிறகு இங்கு உள்ள ஒரு குகைக்குள் யோகத்தில் வந்து அமர்ந்தார் நரசிம்ம பெருமாள். அதே கோலத்தோடு ஜாபாலி மகரிஷிக்கும் காட்சி கொடுத்தாராம். சென்னைக்கு அருகே உள்ளது. பல்லவர் காலத்து குடைவரை கோயில். இக்கோயிலில் உக்கிர நரசிம்மராக, கிழக்கு திசை நோக்கி அருள்புரிகின்றார். எட்டடி உயரத்தில் வீற்றிருந்த திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் விளங்குகிறார். மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியிருக்க, கீழ் இருகரங்கள் அபய கரத்துடன் காட்சி தரும் இவர், ‘நெற்றிக்கண்’ உடையவர். இது ஓர் அபூர்வ தரிசனம். திருவாதிரை, சுவாதி, சதய (ராகு)நட்சத்திர காரர்கள் மற்றும் ராகு தசை நடப்பில் உள்ளவர்கள், சிங்க பெருமாள் கோயில் நரசிம்மரை வணங்கி நலம் பெறலாம். வைகாசி மாதத்தில் மிகச் சிறப்பாக பிரம்மோற்சவம் நடைபெறும்.
* தஞ்சை மாமணிக் கோயில்
இத்தலம் ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாகும். தஞ்சை மாமணிக்கோயில் தஞ்சை நகரில் வெண்ணாற்றங்கரையில் இருக்கிறது. அங்கே மூன்று பெரிய விஷ்ணுகோயில்கள் இருக்கின்றன. நீலமேகப் பெருமாள், மணிகுன்ற பெருமாள் மற்றும் நரசிம்ம பெருமாள். இவை மூன்றும் ஒரே தலமாகப் பாடல்பெற்றவை. தஞ்சாவூரில் தஞ்சையாளி கோயிலில் மூலவர் வீர நரசிம்மர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். தாயார் தஞ்சை நாயகி என்னும் திருநாமத்தோடு எழுந்தருளி இருக்கின்றார். இக்கோயிலின் விமானம் வேதசுந்தரவிமானம் எனும் வகையைச் சேர்ந்தது.
* நாமக்கல்
நாமக்கல்லில் நரசிம்மரும், ஆஞ்சநேய ஸ்வாமியும் அகிலப் பிரசித்தம். ஊரின் நடுவே மலைமுகட்டில் நரசிம்மருக்கு பிரம்மாண்டமான சந்நதி இருக்கிறது. இங்குள்ள குடைவரைக்கோயிலில் நரசிம்மர், வீராசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இரணியன் வயிற்றினைப் பிளந்த கைகள் என்பதற்கு ஏற்ப கைகள் சிவப்பு நீரோட்டத்துடன் அமைந்துள்ளதையும், நகங்களில் ரத்தக்கறை சிவப்பு நிறம் படிந்த காட்சியையும் நாம் தரிசிக்கலாம்.
* திருவரங்கத்தில் மேட்டழகிய சிங்கமும், காட்டழகிய சிங்கமும் ரங்கம் கோயிலுக்கு உள்ளே, தாயார் சந்நதிக்கு அருகே ராமாயணத்தை அங்கீகரித்த நரசிம்மர் மேட்டழகிய சிங்கர் என்கிற பெயரிலேயே இருக்கின்றார். இவரைத் தரிசித்தவர்கள் கையோடு ரங்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள காட்டழகிய சிங்கரையும் தரிசனம் செய்து நலம் பெறலாம். சுமார் 2500 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோயில் இது. தலவிருட்சமாக வன்னி மரம் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான தெய்வமான நரசிம்ம மூர்த்தி, காட்டழகிய சிங்கர் என்கிற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். மூலவர் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மராக, தனது இடது தொடையில் லட்சுமி தேவியை அமர வைத்திருக்கும் நிலையில் அருள்பாலிக்கிறார். விஜயதசமி தினத்தன்று ரங்கம் நம்பெருமாள் இங்குள்ள பெரிய மண்டபத்தில் எழுந்தருளி காலை முதல் மாலை வரை அருள்பாலிக்கிறார்.
* கொடிக்குளம்
மதுரை (யானைமலை) கொடிக்குளம் அருகில் நரசிங்கபுரம் என்கிற ஊரில் யோகநரசிம்மர் காட்சி தருகின்றார். மிக அழகான கோயில். இங்குள்ள தாயாருக்கு நரசிங்கவல்லி என்று பெயர். குடைவரை கோயில். உற்சவருக்கு வரத நரசிம்மர் என்று திருநாமம். செவ்வாய்த் திசை, செவ்வாய்த் தோஷம், செவ்வாய்ப் புத்தி நடப்பவர்கள் அல்லது ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருக்கிறவர்கள், இந்த நரசிம்மரை வணங்கலாம்., பெரிய திருச்சுற்றுச் சுவருக்குள், யோக நரசிம்மர் சந்நதி, நரசிங்கவல்லித் தாயார் சந்நதி ஆகிய சந்நதிகள் அமைந்துள்ளன. தாயார் கருணை பொழியும் திருமுகத்துடன் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். தாயார் சந்நதியைக் கடந்தால் நரசிம்மன் சந்நதியைக் காணலாம். அற்புதமான வேண்டும் வரம் விரைவில் தரும் திருத்தலம் இது.
The post நலம் தரும் நரசிம்ம தலங்கள் appeared first on Dinakaran.