பட்டதாரி பெண்ணிடம் ரூ.46.70 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை பங்கு சந்தையில் அதிக லாபம் எனக்கூறி

1 day ago 2

வேலூர், ஏப்.18: பகுதிநேர வேலை, பங்கு சந்தையில் அதிக பணம் ஆசைக்காட்டி பட்டதாரி பெண்ணிடம் ரூ.46.70 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக புகாரின்பேரில், வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண், முதுகலை பட்டதாரி. இல்லத்தரசியான இவரது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் பார்ட் டைம் ஜாப் என்றும் வீட்டிலிருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என இருந்தது. அதை நம்பிய முதுகலை பட்டதாரி பெண் யூடியூப்பில் வரும் வீடியோ பார்த்து, அதற்கு லைக் செய்து, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி, சிறிய தொகையை கமிஷனாக பெற்றுள்ளார்.

இதைதொடர்ந்து, டெலிகிராமில் ஒரு குழுவில், முதுகலை பட்டதாரி பெண்ணின் எண்ணை இணைத்துள்ளனர். பின்னர், போலியாக ஒரு டிரேடிங் அக்கவுண்ட்டை முதுகலை பட்டதாரி பெண்ணின் பெயரில் தொடங்கி உள்ளனர். இதைதொடர்ந்து, 5 மாதங்களில் 121 தவனைகளில் மொத்தமாக ரூ.46 லட்சத்து 70 ஆயிரத்து 981 பணத்தை அந்த கணக்கில் செலுத்தியுள்ளார். பணத்தை செலுத்த வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்தும், கணவர் மற்றும் உறவினர்களின் 6 வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் முதலீடு செய்துள்ளார்.

பின்னர், அந்த டிரேடிங் அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை எடுக்க முயன்றபோது, இன்னும் அதிக பணத்தை முதலீடு செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த முதுகலை பட்டதாரி பெண் விசாரித்தபோது, டிரேடிங் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பகுதிநேர வேலை, பங்கு சந்தையில் முதலீடு ஆசைக்காட்டி ரூ.46.70 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக நேற்று ‘1930’ என்ற சைபர் கிரைம் எண்ணில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து வேலூர் எஸ்பி மதிவாணன் உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘சமூக வலைதளங்களில் வரும் பங்குச்சந்தை முதலீடு, பகுதி நேர வேலை போன்ற மோசடி விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பலர் இந்த மோசடிகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதில் படித்தவர்களே அதிகம் என்பதுதான் வேதனை. எனவே மோசடி விளம்பரங்களை நம்பாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்றனர்.

The post பட்டதாரி பெண்ணிடம் ரூ.46.70 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை பங்கு சந்தையில் அதிக லாபம் எனக்கூறி appeared first on Dinakaran.

Read Entire Article