தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என ஒரு நாடு அல்லது மாநிலத்திற்கு மிக முக்கியமான இந்த மூன்று விஷயங்களில் கூடுதல் அக்கறை காட்டி வருகிறார். முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து நடத்தி, தமிழகத்தை நோக்கி பல லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து வருகிறார். எண்ணற்ற தொழிற்சாலைகளை தமிழகத்தில் அமைப்பதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு வருகிறார். தமிழகத்திற்கு மட்டும் ரூ.10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்விக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தவப்புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உயர்படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு என திட்டங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். கொரோனா காலக்கட்டங்களில் பிரதமர் மற்றும் பிற மாநில முதல்வர்கள், நோய் பரவலை தடுப்பதற்கான முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டிருந்தனர்.
அப்போது வெளியே வர முடியாமல், உரிய மருத்துவம் கிடைக்காமல், வீட்டிற்குள்ளேயே மிக நோய்வாய்ப்பட்டவர்கள், வயதானோர் முடங்கி கிடந்தனர். முறையான மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளாததால் உடல், மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தனர். இதனை கருத்தில்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே முதன்முறையாக மக்களை தேடி மருத்துவ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆட்சிப் பொறுப்பேற்ற 3வது மாதத்திலேயே 5.8.2021ல் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையை தேடி வர வேண்டாம்.
மருத்துவமே வீடு தேடி வரும் என்பது போல வீடுதோறும் மருந்து பெட்டகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் உள்ளவர்களே, சம்பந்தப்பட்டவர்களின் மொபைல் எண்களில் பேசி, மருந்து, மாத்திரைகளை கொண்டு வரும் காலத்தையும் குறிப்பிட்டு வழங்கி வருகின்றனர். இப்போது கூட இத்திட்டத்தால் தமிழகத்தில் பல லட்சம் பேர் பலனடைகின்றனர். கடந்தாண்டு டிசம்பரில் ஈரோடு மாவட்டத்தில் 2 கோடியாவது பயனாளருக்கான மருத்துவ பெட்டகத்தை முதல்வரே தேடிச் சென்று வழங்கினார்.
இதன்மூலம் இந்த திட்டமானது முதல்வரின் கனவு திட்டம் என்பது மட்டுமல்ல… மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தும் திட்டம் என கூறினாலும் மிகையல்ல. இதன் அடுத்தக்கட்டமாக முதல்வர் மருந்தகம் திட்டம் அமைய உள்ளது. இத்திட்டத்தை வரும் 24ம் தேதி முதல்வர் சென்னையில் துவக்கி வைக்க உள்ளார். இதன்மூலம் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள், மருந்தகம் அமைப்பதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதற்காக அரசு மானியமாக
ரூ.3 லட்சத்தை, பணமாகவும், மருந்தாகவும் வழங்கி உதவுகிறது.
முதல்கட்டமாக ஆயிரம் மருந்தகங்கள் துவங்கப்பட உள்ளன. மருந்தகம் அமைப்பதற்கான விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு தகுதி உடையோருக்கு மருந்தகம் அமைப்பற்கான அனுமதி வழங்கப்பட உள்ளது. அதிக விலை கொடுத்தும் வாங்கப்படும் அத்தியாவசிய மருந்துகளை மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் அருமருந்தாக இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களை இத்திட்டமும் கண்டிப்பாக போய் சேருமென அடித்துக் கூறலாம். தொடர்ந்து மக்களின் நலன் காக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிகின்றன.
The post நலன் காக்கும் முதல்வர் appeared first on Dinakaran.