*ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
நாமக்கல் : நாமக்கல் நரசிம்மசுவாமி கோயிலில் பங்குனி தேர்த்திருவிழா வரும் 12ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, தேர்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில், பங்குனி தேர்த்திருவிழா வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் நரசிம்ம சுவாமி கோயில், ரங்கநாதர் கோயில், ஆஞ்சநேயர் கோயில் ஆகிய 3 கோயில்களிலும் தேரோட்டம் நடைபெறும். இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
நரசிம்ம சுவாமி கோயில் தேர்த் திருவிழாவையொட்டி, கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் உமா பேசியதாவது: நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் தேர்த்திருவிழா, வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி காவல் துறையினர் போக்குவரத்தை சீர்செய்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
சுவாமி திருவீதி உலா வரும் போது, திருவிழா காலங்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொதுமக்கள் போதிய இடைவெளியில் வருவதையும், பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும். தீயணைப்புத்துறையினர் தேரோட்டத்தின் போது, தீயணைப்பு வாகனத்தை தயார் நிலையில் வைக்க வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். அவசர ஊர்தியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நாமக்கல் மாநகராட்சி நிர்வாகம், திருத்தேர் உலா வரும் பாதைகளில், கிருமி நாசினி கொண்டு தூய்மையாக பராமரிக்க வேண்டும். திருத்தேர் உலா வரும் பாதைகளில், மின் பணியாளர்களை போதிய அளவில் நியமித்து கண்காணிக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையினர் திருத்தேர் உலா வரும் பாதைகளில் உள்ள வேகத்தடைகளை நீக்க வேண்டும். தேர்கள் நல்ல நிலையில் உள்ளதா என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உறுதி சான்று அளிக்கவேண்டும். இந்து சமய அறநிலையத்துறையினர் அனைத்து துறைகளுடன் இணைந்து தேர்த்திருவிழா நல்ல முறையில் நடைபெற, உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோருடன் சேர்ந்து தேர் செல்லும் பாதையை முன் ஆய்வு செய்ய வேண்டும். தேர் நிறுத்தும் இடங்களையும் முடிவு செய்து, அறிக்கை அனுப்ப வேண்டும். வருவாய்த்துறை, காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகள் தேர்த் திருவிழாவிற்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட இடங்களில் கூட்டு தணிக்கை மேற்கொண்டு, தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். தேர்த்திருவிழா சிறப்பாக நடத்த, அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் உமா தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், ஏடிஎஸ்பி (மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு) தனராசு, ஆர்டிஓக்கள் சாந்தி, (நாமக்கல்), சுகந்தி (திருச்செங்கோடு), உதவி ஆணையர் இளையராஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தியா, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருண், மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post நரசிம்ம சுவாமி கோயிலில் 12ம் தேதி தேரோட்டம் தேர்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் appeared first on Dinakaran.