
சென்னை,
விஜய் நடிப்பில் வெற்றிப்பெற்ற 'யூத்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பிறகு நடிகராக வலம் வருபவர் நடிகர் நட்டி என்னும் நட்ராஜ். இவர் 'கர்ணன்', 'மகாராஜா' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர் அடுத்ததாக லைட் சவுண்ட் அண்ட் மேஜிக் நிறுவனம் சார்பில் 'ஆண்டவன் அவதாரம்' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை 'நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம், சாலை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சார்லஸ் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக அதிலும் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மேலும் நடிகர் ராகவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கடந்த 9-ந் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் துவங்கியுள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இது ஒரு சயின்ஸ் பிக்சன் படம் என்பதால் எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரங்கள் போன்று அதிலிருந்து இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இப்படம் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.