
டேராடூன்,
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரை சேர்ந்த இளைஞர் பிரதீப் (வயது 28). அதே ஊரை சேர்ந்த இளம்பெண் ஹன்சிகா (வயது 22). இருவரும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரின் சிட்குல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஹரித்வாரில் தனியே வீடு எடுத்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர்.
இதனிடையே, ஹன்சிகாவின் நடத்தையில் பிரதீப்பிற்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் வேறொரு நபருடன் பேசுவதாக பிரதீப் நினைத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிட்குல் பகுதியில் உள்ள முக்கிய சாலையில் ஹன்சிகா இன்று மதியம் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரதீப், ஹன்சிகாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் ஹன்சீகாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஹன்சிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கொல்லப்பட்ட ஹன்சிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலி ஹன்சிகாவை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரதீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.